காக்கா முட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் திருடர்கள் எடுத்துச்சென்ற தேசிய விருதை மன்னிப்பு கடிதத்துடன் அவரது வீட்டின் முன்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதற்கு முன்பே விண்ட் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தைகள் படம் என்ற பிரிவில், தேசிய விருது பெற்றிருந்தார். தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டனவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கினார்.
கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கியிருந்தார். விமர்சனரீதியான பாராட்டுக்களை பெற்றிருந்த இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து மணிகண்டனே தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தனது அடுத்த பட வேலைக்காக மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 8-ந் தேதி மதுரையில் உள்ள அவரது வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் சிலர், பீரோவை உடைத்து கடைசி விவசாயி படத்திற்காக கிடைத்த தேசிய விருது, ஒரு லட்சம் ரொக்கம், 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மணிகண்டன் வீட்டு வாசலில், ஒரு கவரில், ‘’அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கே’’ என்ற மன்னிப்பு கடிதத்துடன், தேசிய விருதுக்கான பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் வீட்டின் வாசலில் தொடங்கவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“