பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிவல் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் வைரமுத்து. தனது எழுத்தின் மூலம் பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ள இவர், சமீப காலமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதில் குறிப்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீ டு புகார் அளித்ததில் இருந்து பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது.
இந்த மீடு விவகாரம் காரணமாகவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படங்களில் இவருக்கு பாட்டு எழுத வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சீரியல் நடிகை விஜே அர்ச்சனா வைரமுத்துவை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டதும் அதற்கு ஜாக்கிரதை என்று பாடகி சின்மயி கருத்து தெரிவித்துதும் வைரலாக பரவியது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருந்த பதிவில்,
“ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!”
என பதிவிட்டிருந்தார்.
அந்த தங்கை உங்களுடைய பேத்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்
— War Room – Volunteer (@itisbds) May 9, 2023
உங்களுடைய பரிசு ஏதும் தேவையில்லை, அப்படி தந்தே ஆகவேண்டும் என்றால் கூரியரில் அனுப்பவும்.
— War Room – Volunteer (@itisbds) May 9, 2023
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், மாணவி நந்தினியை தனது தங்கை நந்தினி என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் உங்கள் பேத்தி வயது பெண்ணை தங்கை என்று சொல்லலாமா பேத்தி அல்லது மாணவி என்று பதிவிட்டிருந்தால் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஒருவர். மற்றொருவர் தங்க பேனாவை நேரில் சந்தித்து கொடுப்பதற்கு பதிலாக கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“