விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் பாலியல் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ள நிலையில், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இவர் மீது இளம்பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறி நடித்து, தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியதுடன், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தினார். மேலும், என்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய விக்ரமன் தற்போது என்னை விட்டு விலகி வேறொரு பெண்ணை காதலித்து வருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்பதால், அக்கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்திருந்தேன். கட்சி சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போலீசார் தலையிட்டு விக்ரமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கிருபாவின் புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக இந்த புகார் மனு குறித்து விக்ரமனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருபா முனுசாமி டுவிட்டரில் விக்ரமன் தன்னிடம் மெசேஜ் வாயிலாக உரையாடியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டு தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்த நிலையில்,இந்த குற்றச்சாட்டுக்ள அனைத்தும் பொய் என்று மறுத்த விக்ரமன்,ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் இந்தக் கதைக்கும் இரு பக்கங்கள் உள்ளது எனக்கூறி கிருபா முனுசாமி தனக்கு எழுதிய காதல் கடிதங்களையும் வெளியிட்டு அறம் வெல்லும் என குறிப்பிட்டு இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“