Annaatthe Movie Review : நாடு முழுவதும் மக்கள் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான அண்ணாத்த திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம், அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.
கிராம ஊராட்சி மன்ற தலைவராக வரும் ரஜினிகாந்த் தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவுகடந்த பாசத்தை பொழிகிறார். இதன் காரணமாக வெளியூரில் படிக்கும் தங்கை விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். அதே வேளையில் ஊருக்கு ஒரு கெடுதல் என்றால் யாருக்கும் அஞ்சாமல் அநியாயத்தை தட்டி கேட்கும் ஒரு தலைவராகவும் உள்ளார். இதனால் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராக உள்ளார்.கீர்த்தி சுரேஷும் தனது அண்ணன் மீது அளவில்லா பாசத்தை வைத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தனது பாசமான தங்கைக்கு ரஜினிகாந்த் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுகிறார். இறுதியாக மாப்பிள்ளை கிடைத்து திருமணத்திற்கு தயாராகும்போது ரஜினிக்கு திடீரென ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையை ரஜினி எப்படி சமாளித்தார்? கீர்த்தி சுரேஷ், திருமணம் நடந்ததா? இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன என்பதை அதிரடி ஆக்ஷன் செண்டிமெண்ட் கலந்து இயக்குநர் சிவா தனக்கே உரிய பாணியில் சொல்லிய படம் தான் அண்ணாத்த.
படத்தில் காளையன் என்ற ஊராட்சி மன்ற தலைவராக வரும் ரஜினிகாந்த் ஊர் மக்களுக்காக பாடுபடுவது, தங்கையிடம் பாசமழை பொழிவது, சகாக்களுடன் இணைந்து காமெடி என அனைத்தில் தனது வழக்கமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு அடுத்து அதிக கவனம் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் இருவரும் கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் அண்ணன் மீது பாசம் காட்டுவதிலும், உறவினர்களுடன் காமெடி செய்வதிலும் கீர்த்தி சுரேஷ் தனியாக தெரிகிறார். வக்கீலாக வரும் நயன்தாரா கொடுத்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
ஆனால் இவரின் கதாப்பாத்திரம் வேதாளம் ஸ்ருதிஹாசனை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பு மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். மற்றபடி சதீஷ், சூரி, பாண்டியராஜன், என பல நட்சத்திர பட்டாளங்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். வில்லன்களாக பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு இருவரும் மிரட்டியுள்ளனர். அதிலும் ஜெகபதி பாபு சிறுத்தை பட வில்லனை நினைவூட்டுகிறார். ஆனாலும் அவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் தனித்துவமானது என்று சொல்லலாம். ஆனால் இந்த படத்தின் முதல்பாதி திருப்பாச்சி, மற்றும் வேலாயுதம் படத்தை நினைவூட்டும் வகையில் காட்சி அமைப்புகள் உள்ளது. இதனால் பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்கு முன்பாக விறுவிறுப்பை ஏற்படுத்தும் காட்சிகள் 2-வது பாதியிலும் தொடர்கிறது. ஆனாலும் தேவையற்ற காட்சியமைப்புகள், மற்றும் லாஜிக் மீறல் காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கதையுடன் சேர்த்து பார்க்கும்போது வேகத்தடைகளாக அமைகிறது. மற்றபடி பின்னணி இசையில் ரஜினி படத்திற்கு என்ன தேவையே அதை உணர்ந்து இசையமைத்துள்ளார். இமான். இந்த படத்தில் காட்டப்படும் அனைத்து இடங்களும் செட் போட்டு எடுக்கப்பட்டதுதான் என்றாலும் அது செட் தான் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் மற்ற ஆடியன்ஸையும் சேர்த்து ரஜினி ரசிகர்களையும் ஏமாற்றுள்ளது என்றே கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil