'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 41.
கடந்த 2017-ம் ஆண்டு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் சங்கையா. விதார்த்த், ரவீனா ஆகியோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றிருந்தது.
புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அப்போது அங்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் இருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பது தான் மீதிக் கதை. இப்படம் மக்களிடையே வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் அவரது இரண்டாவது படமான ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கி இருந்தார். ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடி பாணியில் படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், சுரேஷ் சங்கையா கல்லீரல் பாதிப்பு தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜபாளையம் அருகில் உள்ள கரிசல்குளம் இவரது சொந்த ஊர் ஆகும். சுரேஷ் சங்கையா யோகி பாபுவை வைத்து ஒரு படம் எடுத்து முடித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“