விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சித்திக். ஃபீல் குட் படங்களை கொடுப்பத்தில் கைதேர்ந்த இயக்குனரான இவர், 1989-ம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீங்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் தமிழில் அரங்கேற்ற வேலை என்ற பெயரில், பிரபு, ரேவதி, விகே ராமசாமி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக், விஜய் சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2001-ம் ஆண்டு வெளியாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து விஜயகாந்த் நடிப்பில் எங்கள் அண்ணா, பிரசன்னா நடிப்பில் சாது மிரண்டால், விஜய் நடிப்பில் காவலன், அரவிந்த் சாமி நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக 2020-ம் ஆண்டு வெளியான பிக் பிரதமர் என்ற மலையாளப்படத்தை இயக்கியிருந்த இயக்குனர் சித்திக், திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு சுவாச பிரச்சனை காரணமாக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“