கார்த்தி நடித்த சகுனி படத்தின் இயக்குனர் சங்கர் தயாள் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சந்தானம் – கார்த்தி கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்றும் ரசிக்கக்கூடிய காமெடி படங்களில் ஒன்றாக இருக்கிறது.
சகுனி படத்தை தொடர்ந்து, விஷ்னு விஷால் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகாத நிலையில், 8 ஆண்டுகள் கழித்து யோகி பாபு நடிப்பில், குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பங்கேற்க வந்த இயக்குனர் சங்கர் தயாள் தனக்கு நெஞ்சசு வலிப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிடடதாக கூறியுள்ளனர். தான் இயக்கிய படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த இயக்குனர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“