தமிழ்படமான கூழாங்கல் இந்திய சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனர் பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கிய தமிழ் படமான கூழாங்கல் 94 வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனைப் பற்றிய படம்.
கூழாங்கல் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் தேர்வான செய்தியை விக்னெஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படம் தேர்வானதற்காக, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி என்று படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் கூறினார்.
கூழாங்கல் திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) சிறந்த படத்திற்கான புலி விருதை வென்றது. மேலும் இந்த திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் (IFFLA) திரையிடப்பட்டது.
இயக்குனர் வினோத்ராஜின் முதல் படைப்பான இந்த படம் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அவரது சகோதரி குடிகார கணவரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார், மேலும் தங்குமிடத்திற்காக அலைந்துள்ளார். “சுயமாக கற்றுக்கொண்ட வினோத்ராஜ் ஒரு நல்ல, தொடர்ந்து ஈர்க்கக்கூடியதாக இருக்கும் ஒரு படத்தை நமக்குத் தந்திருக்கிறார். சில நேரங்களில், ஒரு கூழாங்கல் எப்படி ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க இது உங்களை விட்டுச்செல்கிறது,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் சுப்ரா குப்தா படம் பற்றி எழுதினார்.
94 வது ஆஸ்கர் விருதுகள் விழா மார்ச் 27, 2022 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர்.
கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை “மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான்” ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை.
இதற்கு முன்பாக ஆஸ்கர் பரிந்துரைக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ படம் அனுப்பப்பட்டது. அதற்குப் பிறகு ‘கூழாங்கல்’ தான் பரிந்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட தேர்வானதற்கு திரைதுறையினர் அப்படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil