2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா” என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.
இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் நல்லது என்ற நம்பிக்கை இந்தியாவில் பரவலாக உள்ளது. இதன் அடிப்படையில் மக்களை ஏமாற்றி அந்த பிணங்களை எடுக்கும் ஒரு வில்லன் கும்பல், அதன் கைரேகையை பயன்படுத்தி எப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் அதனை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் சொல்வதே ஏஜென்ட் கண்ணாயிரத்தின் கதை.
கதையின் நாயகனாக சந்தானம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தன்னுடைய முந்தைய படங்களில் இருந்து சற்று வேறுபட்ட கதாபாத்திரம் என்பதால் அதற்கேற்ப அளவான நடிப்பை அழகாக திரையில் காட்டி இருக்கிறார். பொதுவாக சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது சற்று ஏமாற்றமே.
ஹீரோ சந்தானமாக இல்லாமல், கதையின் நாயகனாக சந்தானம் நடிப்பில் மிளிர்கிறார். தன் அம்மாவை நினைத்து ஏங்கும் காட்சிகளில் எதார்த்தமான மகனாக கலங்கடிக்கிறார். புதுமுக நாயகியாக தமிழில் காலடி எடுத்து வைக்கும் “ரியா சுமனு”க்கு ஒரு சிறந்த பாத்திரமாகவே இப்படம் அமைந்துள்ளது. வசன உச்சரிப்புகள் சில இடங்களில் தடுமாறினாலும், நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.
புகழ், ரெடின் கிங்ஸ்லியின் காமெடிகள் பெருமளவில் ரசிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஓகே’வாக அமைந்துள்ளது. “யுவன்” பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் என்றாலும் பாடல்கள் சுமார். படத்தின் முதல் பாதியின் வேகம் ரசிகர்களின் பொறுமையை சற்று சோதிக்கிறது என்றாலும் படம் இடைவேளையில் இருந்துதான் வேகம் கூடுகிறது.
படிப்படியாக ஏஜென்ட் கண்ணாயிரம் இந்த குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று தெளிவில்லாமல் முடிந்திருப்பது போல தோன்றுகிறது. ரீமேக் படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் மனோஜ் பீதா. மொத்தத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் சூப்பராக வந்திருக்க வேண்டிய சுமாரான படம்.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil