தம்பியை கொலை செய்த வில்லன் கும்பலை பழிவாங்க துடிக்கும் நாயகன் என நாம் காலம் காலமாக பார்த்து சலித்து போன ஒரு கதை தான் சசிகுமாரின் "நான் மிருகமாய் மாற".
சவுண்ட் இன்ஜினியராக வரும் "சசிகுமார்" தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் தனது ஆக்ரோஷமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இதை தவிர ரசிக்கும் படியான காட்சிகள் எதுவும் அமையவில்லை. விக்ராந்திற்கு ஒரு நல்ல வேடம் அதை நன்றாக செய்திருக்கிறார். மற்றபடி அவருடைய கதாபாத்திரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரத்தம்,கத்தி,கொலை என படம் முழுக்க பயங்கர வன்முறை காட்சிகள். பொதுவாக ஒரு படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இதில் வன்முறைக்குள் ஒரு சின்ன கதையை சொல்லி இருக்கிறார்கள், அந்த அளவிற்கு ரத்தம் சொட்ட சொட்ட வெறி கொண்டு பழிவாங்கும் ஒரு கதைக்களம்.
எந்த ஒரு விறுவிறுப்பும், சுவாரசியமும் இல்லாமல் திரைக்கதை செல்வதால் படத்தை ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை. தம்பியின் கொலைக்காக தான், பழிவாங்க வருகிறார் சசிகுமார், ஆனால் சசிகுமாருக்கும் அவருடைய தம்பிக்கும் இடையேயான அந்த பாசத்தையும்,அன்பையும் வெளிப்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் அமையவில்லை என்பதை ஏற்க முடியவில்லை.
வலுவிழந்த திரைக்கதை ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. படத்தில் சற்று ஆறுதலாக அமைந்த விஷயம் "ஜிப்ரானின்" பின்னணி இசை. திரைக்கதையில் சுவாரஸ்யமில்லை என்றாலும் ஜிப்ரானுடைய இசை அதை ஓரளவுக்கு கொண்டுவர முயற்சி செய்து இருக்கிறது.படத்தில் வன்முறை காட்சிகள் அதிகப்படியாக உள்ளதால் குழந்தைகளுடன் செல்வதை தவிர்க்கவும். மொத்தத்தில் நான் மிருகமாய் மாற - வன்முறையின் உச்சம்.
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“