Tamil Cinema Update Karnan Movie Release Update : தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி கர்ணன் படம் நாளை (ஏப்ரல் 9) வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்து யாருடைய படத்தை இயக்குவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷை இயக்கும் வாய்ப்பு பெற்றார். இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஏற்கனவே ஏப்ரல் 9-ந் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழு மூச்சாக நடைபெற்று வந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விதி அமல்படுத்தப்பட்டாதால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்தனர். தற்போது மீண்டும் அதே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கர்ணன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் பதிலளித்துள்ள கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், "அறுதியிட்டு உறுதி கூறுகிறேன், எண்ணியதை எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி நல்லது நடந்தே தீரும், 'கர்ணன்' எல்லோர் மனதையும் கவர்வான்" அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவன், வெல்வான் 'கர்ணன்' எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil