By: WebDesk
December 19, 2020, 7:21:21 PM
51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பெரிய திரையில் காட்டப்படும். 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு குழுவின் தலைவராக புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் மேத்யூ மட்தான் (John Mathew Matthan) இருந்தார். உறுப்பினர்களாக திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் நடன இயக்குனர் கலாவும் ஒருவர். இந்தியன் பனோரமா பிரிவில் இத்திரைப்படங்கள் திரையிடப்படும். இவற்றில் முதல் படமாக துஷார் ஹிராநந்தினி இயக்கிய சாந்த் கீ ஆங்க் என்னும் இந்தி திரைப்படம் இருக்கும்.
என்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு ‘தேன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டோரா’, ‘காளை’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தருண் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ‘தேன்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Tamil movies asuran and thaen official selection for 51st international film festival