இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைஞானி இளையாஜாவிடம் உதவியாளராக இருந்தவர் ஏ,ஆர்.ரஹ்மான். தொடர்ந்து 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை தொடங்கிய இவர், தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழிகளில் தனது இசை மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லாம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஆஸ்கார் வாங்கிய முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், லி மஸ்க் என்ற படத்தை இயக்கியுள்ளார். ரஹ்மான்.
அதேபோல், அட்கன் சேட்டன் என்ற படத்தை தயாரித்துள்ள ஏ,ஆர்.ரஹ்மான், 99 சாங்கஸ் என்ற படத்திற்கு கதை எழுதி தயாரித்துள்ளார். இசையுலகில் தற்போது சாதனைமேல் சாதனை படைத்து வரும் ஏ,ஆர்.ரஹ்மான் தனது குருநாதர் இளைராஜாவிடம் கருத்து வேறுபாடு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது, இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் என்றால், குடி, பெண்களுடன் இருப்பது, போதை பொருள் பயன்படுத்துவது உள்ளிட்ட பழக்கங்கள் இருப்பவர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். முந்தைய தலைமுறையில் அப்படி இருந்தது. அப்போதெல்லாம் பாடல் மற்றும் இசைத்துறை என்றாலே ஜாக்கிரதையாக இரு என்று சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் முறியடித்தவர் இளையராஜா. இதில் எந்த பழக்கமும் அவரிடம் இல்லை.
ஒரு சாமியார் மாதிரி அவர், இசையமைப்பாளர்கள் குறித்த அனைத்து கெட்ட விஷயங்களையும் உடைத்து குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட எந்த பழக்கமும் அவரிடம் இல்லை இசைக்கு அவர் மரியாதை கொடுக்கிறார். அவரிடம் இருந்து இந்த விஷயம் என்னை ரொம்பவும் பாதித்தது. அவரை பார்த்தால் நடுங்குவார்கள். அவரது கேரக்டர் தான் இதற்கு காரணம். இந்த விஷயங்கள் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது.
இப்போது வரை நானும் அதை கடைபிடித்து வருகிறேன். நான் எந்த நேரத்தில் பாடல் பாட அழைத்தாலும் அதிகாலை 3 மணி என்றால் கூட என்னை நம்பி சகோதரி மனைவி, மகள் யாராக இருந்தாலும் அனுப்பி வைப்பார்கள் ரஹ்மான் ஸ்டூடியோவா பிரச்சனை இல்லை என்று சொல்வார்கள். இதை ஒரு வரப்பிரசாதமாக நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil