தனது இசையால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூரில் சதாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் திருக்கடையூரில் குவிந்தனர்.
Advertisment
மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயது வரத்தைத் தந்த புராணத்துக்கும் சொந்தமானது. இந்தக் கோயிலில் வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
60, 70, 80 மற்றும் 100 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் விருத்தி ஆகிய ஹோமங்களை செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய 60 வயது பூர்த்தி உட்பட அனைத்திற்கும் இந்த கோயிலில் வந்து வழிபடுவது வழக்கம்.
Advertisment
Advertisements
அதன்படி தற்போது 80 வயதை பூர்த்தி செய்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று அக்கோயிலில் சதாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு இளையராஜா தனது குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் கொடிமரத்தின் அருகே அவருக்காக நடந்த கோ பூஜை மற்றும் கஜ பூஜை ஆகிய பூஜைகளில் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து நூறு கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்களால் இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் சிறப்புடன் நடத்தப்பட்டன. அதற்கு பிறகு அனைவரும் தனியார் விடுதியில் ஓய்வெடுத்தனர்.
காலை சதாபிஷேகத்திற்கான இரண்டாம் கால பூஜைகள் இன்று காலை 6 மணிக்கு தொடங்கின. குடும்பத்தினர் புடைசூழ கோயிலுக்கு வருகை தந்த இளையராஜாவை வரவேற்ற சிவாச்சாரியார்கள் சதாபிஷேகத்துக்குரிய கலச பூஜைகள் உள்ளிட்டவற்றை முறைப்படி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் இளையராஜாவுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு அபிராமி அம்மன் சன்னதி மற்றும் அமிர்தகடேஸ்வரர் சன்னதி ஆகியவற்றில் வழிபாடு நடைபெற்றது.
இதில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். பூஜைகளை ராமலிங்க குருக்கள் தலைமையிலான 21 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“