எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் பிரிந்தாலும் எங்களுக்குள் நட்பு தொடரும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டியர் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார். ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த தகவல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது சைந்தவியும் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும், பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைதத தகவலை வைத்து கட்டுக்கதைகளை உருவாக்குவது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. எங்கள் விவாகரத்திற்கு யாரும் காரணம் இல்லை.
எங்களின் நலனுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. பள்ளி காலத்தில் இருந்தே கடந்த 24 வருடங்களாக நானும் ஜி.வி.பிரகாஷூம் நண்பர்களாக இருக்கிறோம். இனியும் அந்த நட்பை தொடருவோம் நன்றி என்று பதிவிட்டுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“