சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 90-களில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் ஆவதற்கு முன்புவரை தமிழ் சினிமாவில், பல வெற்றிப்படங்களை கொடுத்த இளையராஜா, பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஹிட் கொடுத்துள்ளார்.
ஒரு தயாரிப்பாளர் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தால் உடனடியாக இளையராஜாவிடம் கால்ஷீட் கேட்டுவிட்டு, அவர் கால்ஷீட் கொடுத்த பிறகே படத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த நிகழ்வுகள் கூட தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. அந்த அளவிற்கு பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இளையராஜா தற்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, 7000-க்கு அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். நாளை (ஜூலை 14) மாலை 6.30 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள இந்த இசைய நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.சரண், மதுபாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாடல்கள் பாட உள்ளனர். இளையராஜாவின் பல எவர் கிரீன் பாடல்கள் இதில் இடம்பெற உள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா, பதிவிட்டுள்ளார். மெர்குரி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல், லண்டன், பாரிஸ், சூரிச் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, 'இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும். இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து, மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும்" என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“