சென்னையில் உள்ள அவரது வீட்டில் இரண்டு அலெக்ஸாண்ட்ரின் கிளிகளை வைத்திருந்ததற்காக நடிகர் ரோபோ சங்கருக்கு தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு திங்கள்கிழமை ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினரால் பதிவேற்றப்பட்ட இரண்டு வீடியோக்களில் கிளிகள் இடம்பெற்றிருந்தன. புகாரின் அடிப்படையில், கடந்த வாரம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கரின் இல்லத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை IV இன் கீழ் அந்தக் கிளிகள் பாதுகாக்கப்பட்ட கிளிகள் என்பதால், இரண்டு கிளிகளையும் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்: மயில்சாமியின் கடைசி ஆசை; நிச்சயம் நிறைவேற்றுவேன் என ரஜினிகாந்த் உறுதி
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் அதிகாரி ஒருவர், ஆய்வு நேரத்தில் படப்பிடிப்புக்காக நடிகர் ரோபோ சங்கர் இலங்கையில் இருந்ததாகவும், ஊருக்குத் திரும்பிய பிறகு வெள்ளிக்கிழமை அவர்களின் அலுவலகத்தில் வந்து விளக்கம் அளித்ததாகவும் கூறினார்.
“அவர் [ரோபோ சங்கர்] மிகவும் ஒத்துழைத்தார். உண்மையாக, பறவைகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இங்கு அனுமதி குறித்த கேள்விக்கு இடமில்லை, இது போன்ற பூர்வீக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. இது அறியாமை மற்றும் இங்கு வேண்டுமென்றே எதுவும் நடைபெறவில்லை, ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறவைகள் பாதுகாக்கப்படுவதால், நாங்கள் அபராதம் விதித்துள்ளோம். இது அவருக்கு மட்டுமல்ல, இங்குள்ள பலருக்கும் இது போன்ற விஷயங்கள் தெரியாது, அவர்கள் வீட்டில் வெளிநாட்டு இனங்களை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவேன் என்று அவர் எங்களிடம் கூறியுள்ளார், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த பறவைகள் தற்போது சென்னை கிண்டி தேசிய பூங்காவில் இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவை வனப்பகுதியில் விடப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil