தமிழகத்தில் வரும் டிசம்பர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை தள்ளி வைக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. திரைத்துறையினர் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் டிசம்பர் 24-ந் தேதி என்பதால், அன்றைய தினம் கலைஞர் நூற்றாண்டு தினம் கொண்டாடப்படுவது சரியாக இருக்காது என்று பலரும் விழா நாளை மாற்றி வைக்குமாறு கூறி வருகின்றனர். மேலும் எம்.ஜி.ஆர் நினைவு நாள் என்று தெரிந்தும் அதே நாளில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எப்படி அனுமதி கொடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே எம்.ஜி.ஆர் நினைவு நாளில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு தமிழ் திரையுலகினர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24ம் தேதி இந்த நாள், தமிழக மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“