தமிழ் சினிமாவில் ஊடுருவும் தமிழ்த் தேசியம்

சட்டப்படி விஷால் தலைவராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அதன் காரணமாகவே சில நேரங்களில் சட்டத்தை எதிர்த்தும் நிற்க வேண்டியிருக்கிறது என்கிறார், பாரதிராஜா.

பாபு

பெப்சி, தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் எனும் முப்பெரும் சங்கங்களின் கட்டுப்பாட்டில் தமிழ் சினிமா இயங்குகிறது. இதில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் பெப்சியின் ஓர் அங்கம் எனினும் வலுவானது, முக்கியமானது. இந்த மூன்று சங்கங்களும் ஆளும்கட்சி எதுவோ அதற்கு அனுசரணையாக நடந்து கொள்வதை கடமையாக கொண்டவை. திமுக பதவிக்கு வருகையில் ராம.நாராயணன் போன்றவர்கள் வலுவாக செயல்படுவார்கள். அதிமுக பதவியேற்கையில் ராம.நாராயணன் ராஜினாமா செய்து அதிமுகவுக்கு சார்பானவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவார்கள். இதுவே தமிழ் சினிமாவின் அரசியல் அறமாக இதுவரை இருந்தது. அதிமுகவில் ஏற்பட்ட தனிநபர் அதிகார இழப்புக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் சில மாற்றங்கள்.

காவிரி பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு பாரதிராஜா, சீமான், வ.கௌதமன், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து கலை இலக்கிய பேரவை ஒன்றை உருவாக்கினர். நாம் தமிழர் கட்சியின் திரைப்படப் பிரிவு என்று சுருக்கமாக இதனைச் சொல்லலாம். முக்கியமாக நாம் தமிழர் முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய அரசியலையே இந்தப் பேரவை – முக்கியமாக பாரதிராஜா முன்னெடுக்கிறார்.

இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் என எந்தத் தேசியமாக இருந்தாலும் அது சுயபெருமை மற்றும் பிற தேசியங்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றின் மீதே கட்டமைக்கப்படுகிறது. அதனால் தேசியம் என்பது இயல்பாகவே வெறுப்பும், சுயபெருமையும் கொண்ட கறாரான அமைப்பாகவே உருப்பெறுகிறது. இவ்விரண்டும் ஜனநாயகத்துக்கு விரோதமானவை. காவிரி போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை தேசியம் பேசுகிறவர்கள் கையிலெடுக்கும் போது உணர்ச்சிகரமான இளைஞர் கூட்டம் ஒன்று இவர்களிடம் வீழ்ந்துப் போகிறது. அவர்கள் உணர்ச்சிகளுக்கு மேலாக எதையும் சிந்திப்பதில்லை. தமிழ்த் தேசியத்தை பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்குள்ளும் திணிக்கிறார்கள். இது ஆபத்தானது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விமர்சித்த பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சங்க தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தமிழ் கலாச்சாரம், தமிழர் பாரம்பரியம் தெரியவில்லை. அதனாலேயே இதுபோன்ற திரைப்படங்கள் வருகின்றன என்றார். அதாவது தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருக்கும் விஷால் தெலுங்கர், அவருக்கு தமிழர் கலாச்சாரம் தெரியாது. அவரது ஆதரவால்தான் இப்படிப்பட்ட படங்கள் வருகின்றன. இந்த இன அரசியலை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

பாரதிராஜா தலைமையில் ராதாரவி, ஜே.கே.ரித்தீஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து விஷால் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர். விஷாலை ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் போன்ற தாணு ஆதரவு தரப்பு குற்றம்சாட்டுவது புதிதல்ல. அவர்களின் குற்றச்சாட்டுகள் இந்தமுறையும் பழைய எதிர்ப்பின் தொடர்ச்சியாகவே இருந்தது.

விஷால் அவனாகவே தயாரிப்பாளர்கள் சங்கத்தைவிட்டு ஓட வேண்டும். நாங்களாக அவனை விரட்டினால் நன்றாக இருக்காது என்றார் ஜே.கே.ரித்திஷ்.

ஜே.கே.ரித்திஷ் குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. முதலில் விஷாலை ஆதரித்து, நடைமுறை ஆதாயங்கள் இல்லாததால் இப்போது எதிர்க்கிறார். இவரது எதிர்ப்பில் எந்த கருத்தியல் பின்புலமும் இல்லை என்பதால் ஆபத்தில்லை.

தமிழ் ராக்கர்ஸுக்கும் விஷாலுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. லைகா நிறுவனம்தான் தமிழ் ராக்கர்ஸை இயக்குகிறது. இல்லாவிட்டால் ஏன் 22 கோடிகளை லைகா விஷாலுக்கு கடனாக தர வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.

புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து விபரீத கற்பனைகளுடன் பேசுகிறவர் சுரேஷ் காமாட்சி. அவரது குற்றச்சாட்டுகள் மலிவானவை, பலவீனமானவை. விஷாலே அதுபற்றி கவலைப்படப் போவதில்லை எனும் போது மற்றவர்களும் எளிதாக புறந்தள்ளிவிடுவார்கள். லைகாதான் தமிழ் ராக்கர்ஸ் என்றால் லைகா தயாரித்திருக்கும் 2.0, விஜய் படம் ஆகியவற்றை எதிர்ப்பீர்களா என்று கேட்டாலே வாயை மூடிக்கொண்டு நகர்ந்துவிடுவார். ராதாரவி, டி.ராஜேந்தர் போன்றவர்களும் கிட்டத்தட்ட இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளையே வைத்தனர். ஆனால், பாரதிராஜாவின் பேச்சு முக்கியமானது. கருத்தியலுடன் ஆழமான அரசியல் நோக்கம் கொண்டது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தமிழ்த் தேசியத்தை பாரதிராஜாவின் பிரதியெடுக்கிறது.

“லைகா நிறுவனம் என்னிடம் ஈழத்தமிழர் குறித்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கேட்டது. அதனால், அவர்கள் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அக்கறையோடு இருப்பதாகவே நினைக்கிறேன். எந்த நிறுவனமாக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். அதுதான் முக்கியம். ஆனாலும் சில நேரம் சட்டத்தை எதிர்த்தும் நிற்க வேண்டி இருக்கிறது. இனி தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் தமிழர்களே ஆட்சி செய்வார்கள். திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை. தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள். ஆனால் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறோம்” என்றார் பாரதிராஜா.

பாரதிராஜா தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தை தமிழ்த் தேசிய பார்வையுடன் அணுகுவதை இதில் பார்க்கலாம். தெலுங்கரான விஷால் தலைவராக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். சட்டப்படி விஷால் தலைவராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அதன் காரணமாகவே சில நேரங்களில் சட்டத்தை எதிர்த்தும் நிற்க வேண்டியிருக்கிறது என்கிறார். லைகா விவகாரத்தையும் சீமானைப் போலவே கையாள்கிறார்.

ராதாரவி, சுரேஷ் காமாட்சி உள்பட யாருக்கும் லைகாவை விமர்சிப்பதில் தயங்கமில்லை. விஷாலை அடிக்க வேண்டும். அதற்காக எதில் அவரை கட்டி வைத்தாலும் பிரச்சனையில்லை, லைகாவாக இருந்தாலும். ஆனால், பாரதிராஜாவுக்கு அப்படியல்ல.

லைகா தமிழகத்தில் முதல்முறை பிரச்சனையை சந்தித்தது கத்தி படத்தில். லைகா நிறுவனங்களுக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி கத்தியை தயாரித்த லைகாவை தமிழகத்தில் எதிர்த்தனர். ஈழத்தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் கட்டியெழுப்பப்பட்ட சீமானும், அவரது நாம் தமிழர் கட்சியும் லைகாவை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், விஜய் தமிழர், ஆகவே அவர் நடிக்கும் கத்தியை ஆதரிக்கிறோம் என்று லைகாவை ஆதரித்தனர். அன்று சீமான் லைகா மீது எடுத்த அதே ஆதரவு நிலைப்பாடை பாரதிராஜாவின் பேச்சிலும் நாம் கவனிக்கலாம். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ஒரு தமிழரே இருக்க வேண்டும் என்ற அவரது குரலையும்.

தயாரிப்பாளர்கள் சங்கம் உள்பட மொத்தத் திரைத்துறையும் சீர்கெட்டு கிடக்கிறது. அதனை சரி செய்ய முயலுகையில் சின்னச் சின்ன குறைகள் ஏற்பட்டால் அதனை பேசிக்களைந்து முன்னேறுவதைவிடுத்து, ராதாரவி, சுரேஷ் காமாட்சி போன்றவர்கள் தனிநபர் தாக்குதலில் இறங்கி முயற்சியை பின்னுக்கு இழுக்கிறார்கள். பாரதிராஜாவோ தமிழ்த் தேசிய கண்ணோட்டத்துடன் இருக்கிற பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி நாம் தமிழரின் குரலை எதிரொலிக்கிறார். இந்த குரலை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பதும், அதனை புறக்கணிப்பதும் தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது.

×Close
×Close