தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தின் போஸ்டர்தான் தற்போதைக்கு இணையத்தில் ட்ரெண்ட்.
கடந்த 2010-ஆம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கி, நடிகர் சிவா நடித்த திரைப்படம் தமிழ்ப்படம். தமிழ் படங்களின் க்ளீஷேக்களை கிண்டல் செய்து முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக அமைந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து சி.எஸ்.அமுதன் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
இத்திரைப்படத்திலும் நடிகர் சிவா தான் நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்ததுபோன்று நடிகர் சிவா அமர்ந்துள்ளார். இது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல நெருக்கடிகளை சந்திக்கும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.