தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல் எழுத வந்து பின்னாளில் அவருடனே நெருக்கமான நட்பில் இருந்த கவிஞர் வாலி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கண்ணதாசனை சந்தித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு, மனம் மாறி மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகும்வரை அவரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள வாலி, அவர் முதல் ஆன பின்னும் அவருடன் நெருக்கமாக இருந்தார். அதே சமயம், கண்ணதாசன், கவிஞராக வருவதற்கு முன்னாள் வாலியை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து வாலியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வாணொலியில் படம் வரையும் வேலை பார்த்த வாலி, திருச்சியில் ஆல் இந்தியா ரேடியோவில் இருந்துள்ளார்.
அப்போது அந்த ரேடியோ ஸ்டேஷனுக்கு எதிரில், காதல் என்ற பத்திரிக்கை அலுவலகம் இயக்கி வந்துள்ளது. அங்கு, ஓவிராக இருக்கும் ஒருவர் படம் வரைவதை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் அரூர் ராமநாதன் எனக்கு பழக்கம். அப்போது ஒருநாள், அவர் ஒல்லியாக நெற்றியில் விபூதி குங்குமத்துடன் இருக்கும் ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தான் கண்ணதாசன்.
இவர் கண்ணதாசன் மாடர்ன் தியேட்டர்ஸில் சண்டமாருதம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கிறார் என்று சொன்னார். அதேபோல் அவரிடம், இவர் ஆல் இந்தியா ரேடியாவில் வேலை பார்க்கிறார். கவிதையெல்லாம் எழுதுவார் என்று சொன்னார். அப்போது கண்ணதாசன், நீங்கள் கவிதை எழுதி எனக்கு அனுப்புங்கள் நான் சண்டமாருதம் பத்திரிகையில் போடுகிறேன் என்று சொன்னார். இதுதான் கண்ணதாசனுடன் எனக்கு முதல் சந்திப்பு என்று கூறியுள்ளார் கவிஞர் வாலி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“