தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற கவிஞர்களில் முக்கியமானவர் கவியரசர் கண்ணதாசன். தனது பாடல்கள் மூலம் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ள இவர், படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல், அதில் தனது வாழ்வில் நடந்த சம்பவத்தையும் இணைந்து எழுதியிருப்பதே தனிச்சிறப்பாகும்.
Advertisment
கவிஞராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், தன் வாழ்நாளின் இறுதிவரை திரைத்துறையில் தனது எழுத்துப்பணியை தொடர்ந்தவர். தற்போது அவர் இல்லை என்றாலும் அவரது பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி என்றாலும், வருத்தம் என்றாலும் கண்ணதாசன் பாடல்கள் இல்லாமல் இல்லை என்ற நிலை தான் இருக்கிறது.
இப்படி கண்ணதாசன் குறித்து பல தகவல்கள் இருந்தாலும், அவரைப் பற்றிய வதந்திகளும் சமூகவலைதளங்களில் அதிக பரவி வருகிறது. கண்ணதாசனுடன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறிக்கொண்டு பலரும் அவர் குறித்து வதந்தியான தகவல்களை பரப்பி வருவதாக கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பஞ்சு அருணாச்சலம் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ் சினிமாவில், இயக்குனர் தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட பஞ்சு அருணாச்சலம், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியவர். இதனிடையே பஞ்சு அருணாச்சலம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்வற்கு 15 நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று பேசியிருந்தார்.
Advertisment
Advertisements
இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அண்ணாதுரை கண்ணதாசன், ஒரு நண்பர் எனக்கு போன் செய்து, என்னங்க, கண்ணதாசன், ஒரு புத்தகத்தை எடுத்தால் சில நிமிடங்கள் புரட்டி பார்ப்பார் அவ்வளவு தான் அதில் இருக்கும் விஷயங்கள் அவருக்கு மனப்பாடம் ஆகிவிடும் என்று சொன்னீங்க. ஆனா இப்போ சீமான், கண்ணதாசன் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்வதற்காக ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு 15 நாட்கள் மனப்பாடம் செய்து வந்தார் என்று சொல்கிறாறே என்று கேட்டிருந்தார்.
சீமான் பேசிய அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். சீமான் இப்படி பேசும்போது நான் அந்த கூட்டத்தில் தான் இருந்தேன். அந்த விழாவில் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் பாடல்கள் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது. அதை நான் தான் பெற்றுக்கொண்டேன். அந்த மேடையிலேயே சீமான் பேச்சுக்கு மறுப்பு சொல்வது என்பது தவறானது. அதே போல், தன்னிடம் ஒரு தகவலை சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அதை உடனடியாக நம்பிவிடுவார்.
சீமானுக்கு இந்த தகவலை சொன்னவர்கள் தான் கண்ணதாசனின் சொந்தக்காரார் என்று இந்த கதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசன் தன் வாழ்நாளில் அவர்களை எங்கும் அழைத்தது இல்லை. அதனால் அவர்களுக்கு கண்ணதாசனை பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் கண்ணதாசன் பற்றி இவரிடம் சொன்னவுடன், இவரும் நம்பிவிட்டார். அதுதான் அவரின் பலவீனம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கண்ணதாசன் இப்படி படிக்கும் ஆள் இல்லை.
சீமானின் இந்த பேச்சுக்கு நான் மறுப்பு சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இப்படி சொல்கிறார் சீமான் இப்படி சொல்கிறார் என்று ஆளாளுக்கு ஒன்று பேச தொடங்கிவிடுவார்கள் என்பதால் தான் இப்போது விளக்கம் அளித்துள்ளேன் என்று தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“