பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஏற்கனவே அகநக பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது சிவோஹம் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சோழ மன்னர்களின் வரலாற்றை கூறும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படம் தயாராகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியது. மேலும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படத்தின் 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாக இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே அகநக பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது சிவோஹம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல், மதுராந்தகன் அல்லது உத்தம சோழனை (ரஹ்மான்) சுற்றி வருகிறது.
சிறுவயதிலிருந்தே, ஒரு சிவபக்தனாக மாறிய மதுராந்தகன், அதிகார மோகத்தினால் சிவபக்தன் என்பதை மறந்துவிடுகிறான். இந்த அதிகார மோகம், அவனை அரியணைக்கு ஆதித்யகரிகாலனுடன் (விக்ரம்) போட்டியிட வைக்கிறது. ஆதி சங்கரரின் நிர்வாண ஷதகத்தை அடிப்படையாகக் கொண்ட சிவோஹம், மதுராந்தகனின் அதிகார தாகத்தின் நோக்கத்திற்கு எதிரானது. சிவோஹம் என்பது உடல் மற்றும் பொருள் முதல் வாத உலகைக் கடந்து, சிவனாகிய மறைந்த உணர்வோடு ஒன்றினைப் பெறுவதாகும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிவோஹம் பாடலை சத்யபிரகாஷ், டாக்டர். நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், செண்பகராஜ் மற்றும் டி.எஸ்.அய்யப்பன் என சுமார் எட்டு பாடகர்கள் பாடியுள்ளனர். பாடலின் காலம் வெறும் 1.26 நிமிடங்கள் மற்றும் மதுராந்தகனின் எழுச்சியின் போது தோன்றும் இந்த பாடலில் அவர், அனைத்து சைவர்கள் மற்றும் அகோரிகளை தனது உதவிக்கு அழைத்து வருகிறார்.
சாம்ராஜ்யத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் படைகளுக்கு எதிரான சோழனின் போராட்டத்தின் மீதி கதையை சொல்லும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில், ஊமை ராணியின் அடையாளத்தையும் அவர் ஏன் நந்தினியைப் போலவே இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தும். பொன்னியின் செல்வன் 1 ஏற்கனவே இரண்டு பாகங்களின் பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முதல் பாகத்தின் வசூலை இரண்டாம் பாகம் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“