பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட சில நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக பல படங்கில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி சந்தானம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியலும் முடிவுக்கு வந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி, கன்னடாவில் பன்டா என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கன்னடாவில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் நடிப்பில் நாதிருதின்னா படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தற்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள பில்டப் படத்தில் ராதிகா ப்ரீத்தி நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. 80-களில் நடைபெறும் கதை என்று சொல்லப்படுகிறது.
ஆனால் டீசரில் இன்றைய காலக்கடத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்ஸ், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அத்தனை வசதிகள் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. போட்டோ எடுக்கும்போது நடக்கும் சம்பவங்கள் 80-களில் நடப்பது போல் டீசரில் காட்டப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“