சின்னத்திரையின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நஞ்சில் விஜயன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, ரசிகர்கள் மத்த்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், வள்ளி திருமணம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ, மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர், தனது சகோதரன் மற்றும் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அதன்பிறகு நண்பர்கள் மூலம் மரியம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்து கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன், மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் விஜயனிடம், எப்போது நல்ல விஷயம் என்று பலரும் கேட்க, அந்த விஷயம் நடந்தவுடன் நானே அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது நாஞ்சில் விஜயன் நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், கடவுள் என்னை கைவிடவில்லை. எங்கள் வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஒவ்வொரு மாதமும் நாங்கள் எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்தித்தோம். அதேபோல் இந்த மாதமும் காத்திருந்தோம். கடைசியில் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த அவர், ஒரு குழந்தையின் கால் பாதம் பதித்த செயின் ஒன்றை தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் நாஞ்சில் விஜயன்- மரியம் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“