Vijay TV Reality Show Cook With Comali Finalist : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் என மூன்றுபேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ஹிட்டடித்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அஸ்வின் பாபா பாஸ்கர் ஷகிலா, கனி மதுரை முத்து என பலர் சமையல் கலைஞர்களாகவும், பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை என பலர் கோமாளிகளாகவும் கலக்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிச்சுற்று நேற்று முன்தினம் நேற்று என இரு தினங்கள் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற அட்வான்டேஜ் (advantage) டாஸ்கில் கனி வெற்றி பெற்றதால், நேற்றைய போட்டியில் அவருக்கு இரண்டு சலுகைககள் வழங்கப்பட்டது. இதில் முதல் சலுகை அவர், என்ன சமைக்க வேண்டும் என்பத அவரே தீர்மானித்துக்கொள்ளலாம், இரண்டாவது சலுகை மற்றவர்கள் என்ன சமைக்க வேண்டும் என்பதையும் இவரே தீர்மானிக்கலாம் என்று சலுகைகள் வழங்கப்பட்டது.

இதில் முதல் சலுகையாக கனி ப்ரோம் பிரீட் (promfret) மீனை சமைக்கப்போவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் என்ன சமைக்க வேண்டும் என்று தீர்மானித்த கனி, ஷகீலாவுக்கு ஸ்க்விட் (squid) மீனும், பாபா பாஸ்கருக்கு கடல் நண்டு (lobster) அஸ்வினுக்கு ப்ரௌன் (prawn) கொடுத்தார். இதில் அஸ்வின் தனக்கு கடல் உணவு (sea food) என்றாலே பிடிக்காது இதை எப்படி செய்ய போகிறேன் என கூறி புலம்பினார். மேலும் பாபா பாஸ்கருக்கும் கனிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தனக்கு கொடுத்த கடல் நண்டை இதுவரை நான் பார்த்ததே இல்லை, அதனை எப்படி சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது என கூறினார்.
இந்த சுற்றின் முடிவில் இரண்டு நபர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், கனி முதல் ஆளாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அஸ்வின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் 3-வது நபருக்கான போட்டியில், பாபா பாஸ்கருக்கும், ஷகீலாவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் மாங்காய் வைத்து உணவு சமைக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட டாஸ்கில், ஷகீலா மாங்காய் சாதம் செய்தார். ஆனால் வித்தியாசமாக வெளிநாட்டு உணவை கையில் எடுத்த பாபா பாஸ்கர், துபாய் ஸ்வீட் ஒன்றை செய்தார்.
இந்த உணவு நடுவர்களுக்கும் பிடித்திருந்த நிலையில், பாபா பாஸ்கர் மூன்றாவது நபராக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் ஷகீலா அரையிறுதி சுற்றுடன் வெளியேறினார். இது குறித்து அவர் கூறுகையில், தான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் எனது இமேஜை மாற்றிய குக் வித் கோமாளிக்கு நன்றி என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”