சின்னத்திரையில் பல ரியாலிட்டி காமெடி ஷோக்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்த நடிகரும் மெமிக்ரி ஆர்டிஸ்டுமான கோவை குணா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று கோவையில் மரணமடைந்தார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த குணா பல மேடை நிகழ்ச்சிகளில் மெமிக்ரி செய்து மக்களை மகிழ்வித்துள்ளார். அதன்பிறகு 90-களில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை குணா அந்த நிகழ்ச்சியின் டை்டில் வின்னராக வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பழங்கால நடிகர்கள், அசோகன், நம்பியார், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல நடிகளில் குரலை தத்ரூபமாக கொண்டு வரும் கோவை குணா காமெடி நடிகர்களாக சுருளிராஜன், ஜனகராஜ், உள்ளிட்டோர் குரல்களையும் அவர்ளைபோல் பேசி அசத்தியவர். அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கனேசன், ரஜினிகாந்த், ராதாராவி உட்பட திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களின் குரலை அவர்களை போலவே பேசி அசத்தியவர்.
அசத்தப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற கோவை குணா அடுத்து விக்ரமன் இயக்கத்தில் வெளியான சென்னை காதல் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படம் இது என்றாலும் அதன்பிறகு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதே சமயம் இயக்குனர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் நடிப்பதற்காக தன்னை அனுகியதாகவும், அப்போது மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை என்றும் கோவை குணா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மேடை நிகழ்ச்சிகளிலும் அடுத்தவர்களின் ஐடியாவை நான் காப்பி அடிக்க மாட்டேன். நானே சொந்தமாக யோசித்து இந்த நடிகர்கள் இப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து அதைத்தான் செய்வேன். 36 வருடங்களாக மெமிக்ரி செய்து வருகிறேன். இதை தவிர எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து 2பேர் என்னை பார்க்க வந்தார்கள். அப்போது என் மெமிக்ரியை ஷூட் செய்து எடுத்துச்சென்றார்கள். அடுத்த 10 நாட்களில் என்னை சென்னை வர சொன்னார்கள். 1000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இறுதியாக 4 பேர் இறுதிப்போட்டிக்கு வந்தோம். அதில் நான் மதுரை முத்து ரோபோ சங்கர் வடிவேல் டேவிட் ஆகியோர் இருந்தோம். 20 வருடங்கள் மேடை நிகழ்ச்சிகளில் நான் பட்ட கஷ்டங்கள் கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அந்த ஒரு நிமிடம் எனக்கு பெரிய பாக்யம் என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோவை குணா, கொரோனா காலகட்டத்தில் அப்பா டாடி ஃபாதர் நைனா என்ற யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார். சமீப காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் கோவை குணா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு சக மெமிக்ரி கலைஞர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை முத்து
ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன்.இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது: இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் . உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது.இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதன் பாப்
கோவை குணா மரணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தெரியும். எப்போதும் கோட்சூட்டுன் இருப்பார். ஆனால் ஃபர்பாமன்சில் எந்த குறையும் வைக்க மாட்டார். அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்திரும் நடுவராக இருந்துள்ளேன். நிகழச்சியில் பங்கேற்றவர்களில் நம்பர் ஒன் டேலன்ட் அவருக்கு இருக்கிறது. என் நண்பர் எடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் எனக்கு டேட் இல்லாததால் நான் கோவை குணாவை பரிந்துரைத்தேன். கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும். ஆனால் படகுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படித்தான் அளவுக்கு அதிகமாக கெட்ட பழக்கம் இருந்தால் அது மிகவும் மோசமானது. சினிமாவில் இப்படித்தான் நிறைய பேர் கெட்ட பழக்கத்தால் இறந்து போகிறார்கள். கோவை குணா அவ்வளவு பெரிய திறமைசாலி. அவர் இறப்பு எல்லாருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது என மதன் பாப் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.