Zee Tamil Survivor : இறுதிகட்டத்தில் சர்வைவர்… பட்டத்தை குறிவைக்கும் 5 போட்டியாளர்கள்

Tamil Reality Update : போட்டியின் பட்டத்தை அடைவதற்காக பல போட்டியாளர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி களத்தில் கடைசியாக ஒருமுறை மோத உள்ளனர்.

Zee Tamil Survivor Show Final Update : தமிழில் விஜய் டிவிக்கு இணையாக ரியாலிட்டி ஷோக்கள் தருவதில் ஜீ தமிழுக்கு தனி இடம் உண்டு.அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் தொடக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜூன் சின்னத்திரையில் தெகுப்பாளராக அறிமுகமான இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் எவ்வித தகவல் தொடர்பும் இல்லாமல் தனி தீவில் இருந்து வெளியில் வரவேண்டும் என்பதை இலக்காக கொண்டு நடத்தப்படுகிறது.

100 நாட்கள் கொண்ட இந்த ஷோ தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 12-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு சர்வைவர் பட்டம் வழங்கப்பட்டு ரூ 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்.

இது தொடர்பாக ஜீ தமிழ் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், சர்வைவர் – சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாகும்; இந்த நிகழ்ச்சியில் ஆற்றல்மிக்க பல போட்டியாளர்கள் ஒன்றாகக் களமிறக்கப்பட்டனர். அவர்கள் தங்களது மன மற்றும் உடல் வலிமையை உச்சகட்ட சோதனைக்கு உட்படுத்தியும், கடுமையான சூழலில் சமாளித்து வாழும் ‘சர்வைவல்’ உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.

விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், இனிகோ பிரபாகர், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்திரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட அற்புதமான 18 பிரபலங்கள் ‘சர்வைவர்’ பட்டத்தை வெல்வதற்காக களமிறங்கி மோதினர். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உருவெடுத்து, பல்வேறு திருப்பங்களையும், ஆச்சிரியங்களையும் எதிர்கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் பரபரப்புடன் சுறுசுறுப்பாக இந்த சீஸன் முழுவதும் வழிநடத்திச்சென்றார்.

கடந்த 90 நாட்களாக போட்டியாளர்கள் வியப்பூட்டும் வகையிலான தைரியத்தையும், தளராத மன உறுதியையும் வெளிப்படுத்தி, சவாலான இலக்குகளை அடைய போட்டியிட்டும், தங்களுக்கு இருந்த மோசமான பயத்தினை எதிர்கொண்டு வென்றும், ஆள்ளில்லாத ஒரு தீவில் கடும் சூழலை எதிர்கொண்டு வாழ்ந்தனர். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சி எழில்மிகு சான்சிபார் தீவில், ‘காடர்கள்’, மற்றும் ‘வேடர்கள்’ ஆகிய இரண்டு வனவாச அணிகளுக்கு இடையேயான போட்டாப்போட்டியாக துவங்கியது

இரண்டு அணிகளும் தைரியமாக இயற்கையின் கடினமான சூழலை எதிர்கொண்டு, போராட்டத்துடன் தங்கள் சவால்களை சந்தித்தனர். வெளிச்சமே இல்லாத இரவுகளையும், பசி நிறைந்த சில பகல் நேரங்களையும் போட்டியாளர்கள் கடக்க வேண்டியிருந்தது; இருப்பினும் திட்டமிட்டபடி, ஒவ்வொரு போட்டியாளர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்த பின்னரே அத்தகைய சூழலுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். புதிய நட்புகள் ஏற்பட்டதையும், அணிகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டதையும், இரண்டு அணிகளுக்கும் சண்டைகள் உருவாகி, பிறகு ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்ட நெகிழ்ச்சியான தருணங்களையும் கண்டோம்.

இருப்பினும், யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களை டிரைபல் பஞ்சாயத்தில் எலிமினேட் செய்தது இந்த சீஸன் முழுவதும் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. ஆனால், வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் ‘மூன்றாம் உலகம்’ என்கிற மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த சூழலுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பது, மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாத வகையில் சுவாரஸ்யமாக மறைக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட அனைத்துப் போட்டியாளர்களும் மிகக் கடினமான இலக்குகளை எட்டுவதற்கு ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு போட்டியிட்டனர்; அதில் வெற்றிபெற்ற அம்ஸத் கான் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர், இந்த சீஸனின் பாதியில், பிரதான போட்டியில் பங்கேற்க மீண்டும் தீவிற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஏற்கனவே வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் களத்திற்கு மீண்டும் திரும்பியதும், இரண்டு அணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘கொம்பர்கள்’ என்னும் ஒரு பெரிய அணி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து போட்டியாளர்களும் தனித்தனியாக போட்டியிடத் துவங்கினர். சீஸன் முழுவதும் நடைபெற்ற ஒவ்வொரு சவால்களின் போதும், வனவாசிகள் பஞ்சாயத்தின் போதும் போட்டியாளர்கள் இதுவரைக் கண்டிராத தடைகளை எதிர்கொண்டனர்; போட்டியின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அவர்களது போராட்டத்தில் சிலருக்கு காயங்களும், எதிர்பாராத தோல்விகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச்சுற்று, வரும் டிசம்பர் 12, இரவு 9:30 முதல், 11:00 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளது. கடைசி வரை தாக்குப்பிடித்து வெல்லும் இறுதியான வெற்றியாளர், ‘சர்வைவர்’ என்று முடிசூட்டப்படுவதையும், ரூபாய் 1 கோடியை வென்று தட்டிச்செல்வதைக் காணவும் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த மெகா இறுதிச்சுற்றை ரசிகர்கள் தவறவிடாமல் காணவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற மிகமிகக் கடுமையான சவால்களை சமாளித்து வந்தவர்களில், முதல் 5 இடங்களில் – உமாபதி, சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வெனஸ்ஸா க்ரூஸ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான நந்தா, அம்ஸத் கான், இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா மற்றும் விக்ராந்த், ஆகியோர் நடுவர் குழுவினராக அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், இறுதிச்சுற்றில் உள்ளவர்களின் எதிர்காலம் இவர்களது கையில் உள்ளது. போட்டியின் பட்டத்தை அடைவதற்காக பல போட்டியாளர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி களத்தில் கடைசியாக ஒருமுறை மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show zee tamil survivor grand finale update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com