உலககோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், கோப்பையை வெல்வது எப்படி என்பது குறித்து ஆன்மீக குரு சத்குரு இந்திய அணிக்கு டிப்ஸ் வழங்கியுள்ளார்.
உலககோப்பை கிரிக்கெட் தொடர்ந்து கடந்த அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. இதில் லீக் போட்டிகளில் முடிவில் இந்தியா தென்ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதனிடையே இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு டிப்ஸ் கொடுத்துள்ள ஆன்மீக குரு சத்குரு, கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று வீரர்களுக்கு நன்றாக தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்போது உலககோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள். இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலககோப்பை வெல்ல வேண்டும் என்று ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்தில் விளையாடினால் பந்தை தவறவிடுவீர்கள்.
அதேபோல் உலககோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்து கற்ப்பனை செய்து கொண்டு விளையாடினால் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே உலககோப்பையை எப்படி வெல்வது என்று சிந்திக்காமல் பந்தை எப்படி அடிப்படி, எதிரணி விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதை மட்டும் சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“