விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான "குஷி" படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
ஹீரோ விப்லவ்க்கு(விஜய தேவர்கொண்டா) காஷ்மீரில் அரசு வேலை கிடைக்க அங்கே நாயகி ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே ஆராத்யா மீது காதலில் விழும் விப்லவ் நாயகியை கவர்வதற்காக பல வேலைகள் செய்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என வீட்டில் சொல்லும் பொழுது இருவருடைய வீட்டின் நம்பிக்கையும் நேர் எதிராக இருப்பதால் இவர்களுடைய கல்யாணத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை எதிர்த்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு இவர்களுடைய திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து இருவரின் ஒன்றாக இணைந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
சமீப காலமாக விஜய தேவர்கொண்டாவின் படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் இப்படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் திரையில் காட்டியிருக்கும் உழைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. எப்போதுமே சாக்லேட் பாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அவரது முகம் இப்படத்தில் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது.
திரையில் அழகு தேவதையாக மிளிர்ந்து இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா. இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்படத்தில் மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருப்பது சிறப்பு. அதேபோல் சச்சின் கெட்டேகர், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை :
இயக்குனர் ஷிவா நிர்வானா இளைஞர்களை கவர்வதற்காகவே இப்படத்தை எடுத்திருக்கிறார் என தோன்றும் அளவிற்கு படத்தின் நிறைய காட்சிகள் இன்றைய காதலர்கள் கனெக்ட் செய்யும் அளவில் இருப்பது கூடுதல் பலம்.
ஹிஷம் அப்துலின் இசையில் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான ரோஜா நீயா, ஆராய்தா பாடல்கள் கண்ணைக் கவரும் அளவிற்கு உள்ளது. மற்ற பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் படத்தின் பின்னணி இசை மென்மையாகவும், இனிமையாகவும் காதுக்குள் ஒலிக்கிறது.
படம் எப்படி?
முதல் பாதி முழுவதும் காதல், துள்ளல், இளமை என பீல் குட்டாக சென்றாலும், முதல் பாதியின் நீளம் அதை முழுமையாக ரசிக்க முடியாதபடி செய்து விடுகிறது . எப்போதுதான் இடைவேளை வரும் என ரசிகர்கள் கோவப்படும் அளவிற்கு முதல் பாதியில் சில காட்சிகளும், நீளமும் அமைந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு இரண்டாம் பாதியில் பல எமோஷனல் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது.
இருவரின் வாழ்வில் நடக்கும் சண்டைகளும் அதன் பின் நடக்கும் சுவாரசியங்களும் என நிறைய இன்றைய தம்பதிகள் தங்கள் வாழ்வோடு கனெக்ட் செய்யும் படியான காட்சிகளை வைத்து ரசிகர்களை கரெக்ட் செய்திருக்கிறார் இயக்குனர். இடையில் வரும் அர்ஜுன் ரெட்டி பிஜிஎம், ஊ சொல்றியா மாமா பாடல் என விசில் அடிக்கும் மொமென்ட்ஸ் பல உள்ளது. ஆங்காங்கே வரும் வாழ்வியல் வசனங்களும் கைதட்டல்கள் பெறுகின்றன.
மொத்தத்தில் சாஸ்திரங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் அப்பாற்பட்டது காதல் என்னும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்களுடனும், காதலர்களுடனும் சென்று ரசிக்கும் படியான ஒரு பீல் குட் படம் தான் இந்த "குஷி"
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“