கன்னட படமாக கேடியில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் படப்பிடிப்பில் காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், இது உண்மையில்லை என்று சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் சஞ்சய் தத். தற்போது தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், கே.ஜி.எஃப் 2-ம் பாகத்தில் அதிரா கேரக்டரில் நடித்து அதிர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜயின் லியோ படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.
காஷ்மீரில் நடந்த லியோ படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே லியோ படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத் அடுத்து கன்னட படமாக கேடி தி டிவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். துருவா சர்ஜா மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தை பிரேம் இயக்கியுள்ளார்.
இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நிலையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. இதனிடையே கேடி படத்தில், வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும்போது சஞ்சய் தத் காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது அவரது முகம், முழங்கை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இது குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடவுள் அருளால் நான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனது காட்சிகளை படமாக்கும்போது குழுவினர் மிகவும் கவனமாக இருந்தனர். உங்கள் அக்கறைக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“