சன் டி.வியின் நந்தினி மற்றும் கண்ணான கண்ணே சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராகுல் ரவி தற்போது மனைவி அளித்த புகாரின் காரணமாக கைதுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள நடிகர் ரகுல் ரவி தமிழில் நந்தினி சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கண்ணான கண்ணே தொடரில் நடித்த இவர், அபியும் நானும், அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் சிறப்பு தொற்றத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராகுல் ரவி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்தார். கண்ணான கண்ணே சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில, ராகுல் ரவி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு ராகுல் ரவி தனது காதலி லட்சுமி நாயர் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. திருமணமான தொடக்கத்தில் ரீல்ஸ் வீடியோ மூலம் இணையத்தில் பிரபலமான நிலையில், சில மாதங்களிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே தற்போது ராகுல் ரவிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான ராகுல் மனைவி கேட்டபோது, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தான் அவர் புகார் அளித்தார் என்றும் இது குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் ரவி முன்ஜாமீன் கேட்டதாகவும், அது கிடைக்கவில்லை என்பதால், தற்போது அவர் கைதுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் அவரை தேடி வரும் நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறி வருகின்றனர்.
சின்னத்திரை சீரியல் நடிகர் மனைவி அளித்த புகாரின் காரணமாக கைதுக்கு பயந்து தலைமறைவாகியுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“