தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி ராவ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டூப்பான நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2013-ம் ஆண்டு தமிழில் வெளியான சூது கவ்வும், பீட்சா 2, உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி ராவ். தொடர்ந்து, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, செய், பொத்தானூர் தபால் நிலையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சின்னத்திரையில் கால்பதித்த அஞ்சலி ராவ், சன் டிவியின் மகாலட்சுமி, ஜீ தமிழின் தலையனை பூக்கள், லட்சுமி ஸ்டோர்ஸ், கண்மணி உள்ளிட்ட சீரியலிகளிலும் நடித்துள்ளார். தற்போது திருமதி ஹிட்லர் மலையாள வெர்ஷனான மிஸஸ் ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழ் பச்சக்கிளி தொடரில் வழக்கறிஞர் ரம்யாவாக நடித்து வருகிறார்.
தற்போது சில வெப் தொடர்களில் நடித்து வரும் அஞ்சலி ராவ், தென்னிந்திய அழகி போட்டியில் அரையிறுதிவரை சென்றுள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்து பிரபலமானாலும் தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே தற்போது அஞ்சலி ராவ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டூப்பாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2014-ம் ஆண்டு ரஜினிகாந்த் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான அனிமேஷன் படம் கோச்சடையான். மோஷன் கேப்சூர் தொழில்நுட்பத்தில் தமிழில் வெளியான முதல்படம் என்ற பெயரை பெற்ற கோச்சடையான் படத்தில், தீபிகாவுக்கு பதிலாக அஞ்சலி ராவ் டூப் போட்டு நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“