சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ்பெற்ற நடிகை கவுதமி வேம்புநாதன், நான் வில்லியாக நடித்ததால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சின்னத்திரையில், கடந்த 20 வருடங்களாக வில்லி வேடங்களில் நடித்து புகழ் பெற்று வருபவர் கவுதமி வேம்புநாதன். குறிப்பாக திருமதி செல்வம் என்ற மெகாஹிட் சீரியலில், ஹீரோ சஞ்சீவின் சித்தியாக வில்லி ரோலில் நடித்து அசத்திய இவர், சன் டிவியின் நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மாயாவி, சூலம், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
இதனிடையே தனது 20 வருட சினிமா அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் தான் உடற்பயிற்சி செய்துகொண்டே பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த நேர்காணலில் தான் நடிக்க வந்தது எப்படி? வில்லியாக நடித்ததால் தனது குடும்பத்தில் என்ன பிரச்சனை ஏற்பட்டது, தனது மகன் என்ன சொன்னார் என்பது குறித்தும், குறிப்பாக தான் வில்லியாக நடித்ததால் தனது மகன் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்றும் உருக்கமாக பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் சின்னத்திரைக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிறது. இதில் 18 வருடங்கள் நான் சன் டிவி சீரியல்களில் தான் நடித்தேன். என்னை நடி்கையாக பலருக்கும் தெரிந்தாலும், 800 மீட்டர் ரிலே ரன்னர் போட்டியில் மாவட்ட அளவில் கலந்துகொண்டேன். அதற்கு மேல் என்னால் போக முடியவில்லை. பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினேன். அதனால் அந்த நேரத்தில் எனக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது.
எனது அப்பா சின்னத்திரை நடிகராக இருந்தால், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னையும் நீ நடிக்க வரியா என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். திருமணத்திற்கு பின் நடிக்க வந்தேன். அப்போது எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் எனக்கு வந்தது அனைத்துமே வில்லி வேடங்கள் தான். வில்லியாக நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்று நினைத்து நடித்தேன்.
என் நடிப்பை பார்த்து பலர் என்னிடம் பேசவே இல்லை. எனது நடிப்பை பார்த்து, அம்மா நீ இப்படி நடித்தால் எனக்கு யாரும் பொண்ணு தர மாட்டார்கள் என்று சொல்வான். அதேபோல் ஒருமுறை அப்படி நடந்தது. ஒரு பொண்ணு வீட்டில் எங்கள் ஃபேமிலி போட்டோ காட்டியபோது, என் முகத்தை பார்த்து இவர் வில்லியாச்சே, என்று பயப்பட்டு இருக்கிறார். ஆனால் என்னிடம் பேசுபவர்களுக்கு நான் எப்படிப்பட்ட ஒரு ஜாலி கேரக்டர் என்று தெரியும் என்று பேசியுள்ளார்.
மேலும் 50 வயதை கடந்தும் நான் இவ்வளவு நச்னு இருக்கேன் என்றால் அதற்கு காரணம் உடற்பயிற்சி தான் என்று கூறியுள்ளார். கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவ வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“