சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சில சீரியல்களில் நடித்து வரும் நிலையில், இதில் ஒரு சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி சினிமா மற்றும் சின்னத்திரையில் சாதித்தவர்கள் பலர் உள்ளனர். கடினமான உழைப்பும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சொல்வார்கள். அந்த வகையில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் காயத்ரி கிருஷ்ணன்.
சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரின் அம்மா ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வரும் இவர், சின்னத்திரையில் தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதன்பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காயத்ரி நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் நடிப்பதற்காக வாய்ப்பு தேடியுள்ளார். ஆனாலும் இவரது உடல் எடை மற்றும் கருமை நிறத்தை காரணம் காட்டி வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்திய இவர், வயிற்றில் குழந்தையுடன் டாக்டர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். அதன்பிறகு நடிப்பு வாய்ப்பு தேடிய இவருக்கு அயலி வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் காயத்ரியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து சன்டிவியின் எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்து வரும் காயத்ரி கிருஷ்ணன், அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரான கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியல் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக காயத்ரி அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் காயத்ரி கிருஷ்ணனுக்கு பதிலாக இனி நடிகை தாரணி நடிக்க இருக்கிறார் கூறப்பட்டு வரும் நிலையில், சமீப நாட்களாக எதிர்நீச்சல் சீரியலிலும் ஜான்சி ராணி கேரக்டர் வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“