எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகை ஹரிப்பிரியா இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நிலையில், தற்போது அவர் ஒரு நடனப்பள்ளியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார்போல் அவ்வப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்புவதும், பழைய சீரியல்களை முடிப்பதும், டிவி நிர்வாகம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் இருந்தவரை எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது.
ஒரு கட்டத்தில் மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. 700 எபிசோடுகளுக்கு அதிகமாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வந்தவர் ஹரிப்பியா இசை.
பெண்கள் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த எதிர்நீச்சல் சீரியலில், நடித்து வந்த ஹரிப்பிரியா இசை தற்போது, தனது வாழ்க்கையில், முன்னேற்றத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளார். பரதநாட்டியம் மீது தீராத ஆர்வம் கொண்ட ஹரிப்ரியா தற்போது தனியாக நடனப்பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். காலி கல்பா என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இசைப்பள்ளி, சென்னை போரூர் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“