சமீபத்தில் சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகை கண்மணி மனோகரன் அடுத்து விஜய் டிவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவது போல, சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முன்பு சன்டிவி சீரியல் மற்றுமு் அந்த சீரியல் நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருந்த நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல்களும், அதில் நடித்து வரும் நடிகைகளும் தங்களுக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்று வருகிறது.
இதன் காரணமாக ஒரு சீரியல் முடிவுக்கு வரும்போது, அந்த சீரியலில் நடித்த நடிகைகள் அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளனர் என்பது குறித்த தகவலை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கண்மணி மனோகரன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கண்மணி மனோகரன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
பாரதி கண்ணம்மா மூலம் புகழ் பெற்ற இவர், ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் ஹீரோயினாக 2 வேடங்களில் நடித்திருந்தார். இந்த சீரியலும் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரயில் முடிவுக்கு வந்தது. இதனால் கண்மணி மனோகரன் அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
சன்டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் அஸ்வத் தான் கண்மணியின் வருங்கால கணவர். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது கண்மணி மனோகரனின் அடுத்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கிய இயக்குனர் பிரவின் பெண்ணட் அடுத்து விஜய் டிவியின் மகாநதி சீரியலை இயக்கி வருகிறார். 4 சகோதரிகள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், காற்றுக்கொன்ன வேலி சீரியலில் நடித்த சாமிநாதன் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் தற்போது முக்கிய கேரக்டரில் நடிக்க கண்மணி மனோகரன் என்ட்ரி ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் எந்த கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், கண்மணியின் வரவு சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“