சன்டிவியின் அண்ணாமலை மற்றும் கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சரி, தற்போது தலைமுடி இல்லாமல் வித்தியாசமாக வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வரும் நிலையில், இவருக்கு ஏன் இந்த நிலைமை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
90-களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் கோலங்கள். நடிகை தேவயானி நாயகியாக நடித்திருந்த இந்த சீரியலில், சத்தியபிரியா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கியிருந்தார். இநத சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில், தேவயானியின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை மஞ்சரி. இந்த சீரியல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்திருந்தது.
அதேபோல், ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அண்ணாமலை சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்திருந்த மஞ்சரி, தனது நடிப்பு அனுபவம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் தலைமுடி இல்லாமல் மொட்டையடித்தபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் கேள்விகளை எழுப்ப, இந்த பேட்டியிலேயே தொகுப்பாளர் கேட்ட இது தொடர்பான கேள்விக்கும் மஞ்சரி பதில் அளித்துள்ளார்.
நான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன். ஆரம்பதில் இருந்தே, சீரியல் நடிப்புக்காக தமிழகத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். கோலங்கள் சீரியலில் நடிக்கும்போது நான் கர்ப்பமாக இருந்ததால், விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அதனால் தான் சீரியலில் இருந்து விலகினேன். ஆனால் நான் விலகியது குறித்து மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தை பிறந்து 3 மாதங்களுக்கு பிறகு, இயக்குனர் திருச்செல்வம், தேவயானி மேடம் ஆகியோர் அழைத்ததால் மீண்டும் கோலங்கள் சீரியலில் நடித்தேன்.
இங்கு குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சிக்ச்சை அளிக்கும்போது தலைமுடி உதிர்ந்துவிடும் என்பதால், அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் முடியை அவர்கள் விக்காக பயன்படுத்திக்கொள்வார்கள். அதற்காக நான் எனது தலைமுடியை கொடுத்திருக்கிறேன். கடவுளுக்கு தலைமுடி காணிக்கை செலுத்த இருந்தபோது இந்த முடி டொனேஷன் பற்றி எனக்கு தெரியவந்தது.
கடவுளுக்கு முடியை கொடுத்து அது வீணாக குப்பைக்கு போவதை விட, வருடத்திற்கு இருமுறை கடவுளின் பேரை சொல்லி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டொனேஷன் செய்துவிடுவேன். நான் நடிக்க வந்தாலும், இதே கெட்டப்புடன் தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“