விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அருண் பிரசாத் – ரோஷ்னி ஹரிப்பிரியன் இணைந்து நடித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்பிரியன் விலகியதை தொடர்ந்து அவர் நடித்த வந்த கண்ணம்மா கேரக்டருக்கு ஒப்பந்தமானவர் தான் வினுஷா தேவி. ரோஷ்னியின் இடத்தை இவர் பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வினுஷா தேவி, அடுத்து இந்த சீரியலில் 2-வது சீசனிலும் நடித்திருந்தார். சுப்பு சூரியன் நாயகனாக நடித்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், விரைவாக முடித்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த வினுஷா தேவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்று 40 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
இதனிடையே தற்போது வினுஷா புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான பனிவிழும் மலர் வனம் சீரியல் ப்ரமோ கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட திரைக்கதை என்பது இந்த சீரியலின் ப்ரமோவில் தெரிகிறது. இந்த சீரியலில் வினுஷா தேவி நாயகியாக நடித்துள்ளார்.
ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் சித்தார்த் குமரன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில், தமிழும் சரஸ்வதியும் புகழ் ரயன், மௌனராகம் சீரியல் ஷீல்பா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.