உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, உலக அளவில் 17 கோடிக்கும் அதிகமான மக்களை தாக்கியும், 35 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொன்றும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதுவரையில் 2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. அவர்களில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றே நிரந்திர தீர்வாக அமையும் என உலக சுகாதார அமைப்பும், மருத்துவர்களும், அரசுகளும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்று. பொது மக்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசியின் தேவையை உணர்ந்து செலுத்திக் கொண்டு வந்தாலும், கிராமப்புறங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்ட மறுத்து வருகின்றனர். இதற்கு தடுப்பூசி குறித்தான அச்சமே காரணமாக பார்க்கப்படுகிறது. அரசுகள் பல வகைகளில் பொது மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தினமும் தமிழ் சீரியல் ரசிகர்களை அவர்களது இல்லங்களுக்கே டிவி தொடர்கள் மூலம் சென்றடையும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் பதிவை சான்றாக எடுத்துக் கொண்டு, ரசிகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக விளங்கிய ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 என பிரபல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் பவித்ரா லட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கெடுப்பதற்காக தனக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், சிறு வயதில் இருந்தே தனக்கு ஊசி என்றால் பயம். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசியை நம்பிக்கையுடன் செலுத்திக் கொண்டுள்ளேன் என பவித்ரா குறிப்பிட்டுள்ளார்.
சன் டிவி சீரியல்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தடுப்பூசி செலுத்திக் கொண்டு பத்திரமாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பிரியமான குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னரான கனி, தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது எனவும், அனைவரும் நிச்சயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் டிவி யின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, ‘ரொம்ப யோசிச்சேன். பயந்தேன். மத்த மருந்துகளெல்லாம் இப்போ நான் எடுத்துட்டு இருக்கேன். என் டாக்டர்கிட்ட கேட்டேன். இப்போ ரொம்ப முக்கியமா இருக்குறது தடுப்பூசி, அத எடுத்துக்கோங்கனு சொன்னாரு. அதுக்கு அப்பறமா, எனக்கான தடுப்பூசிக்கு ஆன்லைன் பதிவு பண்ணி, இப்போ போட்டுக்கிட்டேன். மருத்துவர்கள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு நடக்க வேண்டும்’ என தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இவர்களை அடுத்து, திருமதி செல்வம் மற்றும் யாரடி நீ மோகினி புகழ் நடிகர் சஞ்சீவ், பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ், நடிகர் சந்தனுவின் மணைவியான நிகழ்ச்சி தொகுப்பாளர் கிர்த்தி சந்தனு என பல பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்னும் என்ன தயக்கம்? கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு விரைவில் இந்த பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil