எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் போட்டியில் இருந்த எழுத்தாளரும் நடிகருமான வேலா ராமமூர்த்தியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாகவும், அவருக்கு பதிலாக மற்றொ வில்லன் நடிகர் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் ஆதி குணசேகரன் கேரக்டர். நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நடித்து வந்த இந்த கேரக்டர் எதிர்நீச்சல் சீரியலின் தூண் என்று சொல்லலாம்.
சிறப்பாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நடித்து வந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதனிடையே சமீபத்தில் நடிகர் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் அவரது அண்ணனாக நடித்த எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில், ஆதி குணசேகரன் கேரக்டரில் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்று கூறப்பட்டது. இதனிடையே தற்போது நடிகர் பசுபதி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“