சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை சத்யபிரியா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக வருகிறார். சமீப கால எபிசோடுகளில் தம்பிகள் அண்ணன் குணசேகரனுக்கு எதிராக திரும்பிவிட்டனர்
இதன் காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், குணகேகரன், தனது மகளை கடத்தி வைத்தது, அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியது என சீரியல் பரபரப்பான திருப்பங்களை கண்டது. ஆனாலும், அப்பாவே மகளை கடத்தியது தொடர்பான காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்த நிலையில், பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
அதேபோல் சீரியலின் தொடக்கத்தில் இருந்த கேரக்டர்களை விட, சமீபத்தில் புதிதாக சில கேரக்டர்கள் உள்ளே வந்ததால், சீரியலின கதை வேறு கோணத்தில் பயணிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், கதையும் கடந்த சில தினங்களாக இழுவையாக சென்றுகொண்டிருப்பதாக கூறிவந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களாக எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இதில் நடித்து வரும் நடிகைகளும் அதை உறுதி செய்யும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யபிரியா, எதிர்நீச்சல் சீரியல் முடியப்போகுதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதில் அளித்திருந்தார். அதேபோல் தற்போது எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக ஒரு போஸ்ட் வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு நெட்டிசன், பட்டம்மாள், மாரிமுத்து இல்லாத சீரியல் நன்றாகவே இல்லை. மாரிமுத்து தங்கை கல்யாணத்திற்கு அப்புறம் சீரியலில் விறுவிறுப்பு இல்லை என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த சத்யபிரியா, அதான் சீரியலை முடிக்க போறோமே, இப்போ சந்தோமா உங்களுக்கு என்று கேட்டுள்ளார். இதனால் சீரியல் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்த எதிர்நீச்சல், கடந்த சில வாரங்களாக 5-வது இடத்திற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதே சீரியலை விரைவில் முடிக்க காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“