திரைப்படங்களை போல் சின்னத்திரை சீரியல்களுக்கும் சென்சார் அவசியம் என்று அனைவரும் போர் கொடி தூக்கும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்களில் எல்லை மீறிய காட்சிகள் அரங்கேறி குடும்ப ரசிகர்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ள சீரியல் காற்றுக்கென்ன வேலி.
திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இல்லத்தரசிகளை தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் தற்போது டிவி சீரியல்கள் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில், ஒருசில சீரியல்கள் முகம் சுளிக்கும் காட்சி அமைப்புகளை வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் திக்குமுக்காட வைப்பது இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாக உள்ளது.
இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முதலிரவு மற்றும் லிப்லாக் சீன் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் அதே முதலிரவு மற்றும் தம்பதி இருவரும் ஒன்றாக குளிப்பது போன்ற காட்சிகளை வைத்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது போன்ற காட்சிகளை நெட்டிசன்கள் எவ்வளவுதான் கலாய்த்தாலும் மீண்டும் அதேபோன்ற காட்சிகள் வந்துகொண்டுதான் இருக்கிறத.
அதேபோல் காற்றுக்கென்ன வேலி சீரியலையும் தற்போது நெட்சன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். படிப்புதான் முக்கியம் என்று பெற்றோரிடம் சண்டை போட்டு ஊரைவிட்டு சென்னைக்கு வரும் நாயகி பல போராட்டங்களுக்கு பிறகு கல்லூரியில் சேர்கிறார். அங்கு படிப்புடன் சேர்ந்து கல்லூரி ஆசிரியரோடு காதல் வந்துவிட ஆசிரியருக்கும் மாணவிக்கும் காதலா என்று பலரும் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வருகின்றனர்.
இந்த சீரியலின் நாயகி வெண்ணிலாவும் நாயகன் சூர்யாவும் காதலித்த நிலையில், இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து இந்த காதல் திருமணம் வரை செல்கிறது. அப்போது நாயகன் வீட்டா செய்த ஒரு சூழ்ச்சியால் நாயகியின் அப்பாவை நாயகன் அடித்துவிட சூர்ய எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து நாயகி வெண்ணிலா கல்யாணத்தை நிறுத்துகிறார். அப்போது வெண்ணிலாவுக்குள் இருக்கும் காதலை வெளியே கொண்டு வரும் நோக்கத்தில் தன்னை ஒருதலையாக காதலித்த பெண்ணை காதலிப்பது போன்று சூர்யா நடிக்க ஒரு கட்டத்தில் வெண்ணிலா தனது காதலை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த எபிசோட்டில் சூர்யா கோவிலில் வைத்து அவருக்கு தெரியாமல் வெண்ணிலாவுக்கு தாலி கட்டிவிடுகிறார். அதன்பிறகு உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது இனி நீ என் பொண்டாட்டி என்று சொல்லி வெண்ணிலாவின் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் தங்கிவிடுகிறார் சூர்யா. இந்த காட்சிக்கே ரசிகர்கள் விமர்சனங்களை கடுமையாக வைத்து வருகின்றனர்.
ஆனால் இந்த காட்சியையே முந்தி செல்லும் வகையில் யாருக்கும் தெரியாமல் வெண்ணிலா அறையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்கிறார் சூர்யா. இந்த காட்சியும் ஒளிபரப்பான நிலையில், தற்போது இருவரும் ஒரு பாத்ரூமில் குளிப்பது போன்ற காட்சியும் ஒளிபரப்பாகியுள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் இருப்பதால் கவனமாக ஒரு திரைப்படத்தை எடுக்கின்றர். அப்படியே அந்தரங்க காட்சியில் இருந்தாலும் அது வயது வந்தோருக்கான படம் என்று எ சான்றிதழ் கொடுத்துவிடுகின்றனர்.
ஆனால் வீ்ட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் சீரியலுக்கு எவ்வித சென்சாரும் இல்லை என்ற சுதந்திரத்தை இப்படி தவறாக பயன்படுத்தி வருகின்றன. இந்த மாதிரியான சீரியல்களை தடை செய்ய வேண்டும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில், டிவி சீரியல்களுக்கு சென்சார் சான்றிதழ் அவசியம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.