ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடிவுக்கு வந்த நிலையில், இது குறித்து அந்த சீரியலின் நாயகி ரேஷ்மா அதிருப்தியுடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் ஜெய் ஆகாஷ் ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையில், தற்போது ரேஷ்மாவின் ரசிகர்கள் ஜெய் ஆகாஷ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து வந்த இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல், கடந்த ஜனவரி 17-ந் தேதி திடீரென முடிவுக்கு வந்தது. இது குறித்து நடிரக ரேஷ்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒன் லாஸ்ட் டைம், நல்ல பண்ணிட்டீங்க, உண்மை கண்டிப்பா வெளியில் வரும், நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று பதிவிட்டு, ஜீ தமிழ், நடிகர் ஜெய் ஆகாஷ், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது சீரியல் விரைவாக முடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஜெய் ஆகாஷ் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து எல்லோரும் பல்வேறு வதந்திகள் பரப்பி வருகிறார்கள் அது உண்மை இல்லை. உண்மையான காரணம் என்னுடைய உடல்நிலை தான். சீரியல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு இருந்தது. மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் சீரியல் தொடங்க வேண்டும் என்பதற்காக நான் ஆபரேஷன் செய்யாமல் அந்த வலியோடு தான் சீரியலில் நடிக்க தொடங்கினேன். ஸ்பெஷல் எபிசோடுக்காக, கதாநாயகி ரேஷ்மாவை தூக்கிக் கொண்டு நான் ஓடுவது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை எடுத்து முடித்ததும் எனக்கு கால் வலி அதிகமாகிவிட்டது. ஆனால் அதை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருந்தேன். தற்போது ஆபரேஷன் செய்யாமல் போனால் இது பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால் நான் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
ஒரு வாரம் நான் சீரியலில் இல்லை என்பதால் கதாநாயகன் இல்லாமல் கதை நல்லா இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. சேனல் தரப்பினரும் அதை விரும்பவில்லை. வேறு வழியில்லாமல் தான் சீரியலை முடிக்கிறோம். எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து நடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன் ஆனாலும் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என்று கூறியிருந்தார்.
தற்போது இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகை ரேஷ்மாவின் ரசிகர்கள், நீங்கள் இல்லாதனால் இன்ட்ரஸ்டிங்கா இல்லை என்று யார் சொன்னது சார்? நீங்கள் இல்லாத ஒரு வாரம், மற்ற நடிகர்கள் கேரக்டர்கள், அவர்கள் ட்ராக் செய்த காட்சிகள் அனைத்தும் நல்லதான் போச்சு. உங்களால் மட்டும் தான் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் ரன் ஆனது என்று தற்பெருமை பேசுறீங்க, அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்ததால் தான் சீரியல் நல்ல போச்சு. உங்களால் மட்டும் நல்லா போகவில்லை.
உங்களுக்கு பதிலா வேறொரு நடிகரை வச்சி எடுத்துக்கோங்க என்று சொல்லிருக்கீங்க, அப்புறம் ஏன் சேனல் சீரியலை இவ்வளவு, சீக்கிரமா முடிக்கனும், அனைத்து நடிகர்களின் நடிப்பு வேஸ்டா போச்சு என்று பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“