Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடனும் உறவுகளுக்கு இடையே நெகிழ்ச்சியான உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வுகளுடன் பரபரப்பான கட்டங்களை அடைந்து வருகிறது.
ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணனும் சந்தியாவும் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்கப்போகிறார்கள். அந்த கிராமம் பசுமையான வயல்கள், ஒரு ஊரணி, கண்மாய் என்று அழகாக இருக்கிறது. கண்மாய் கரையோரம் இருக்கிற அந்த அம்மன் கோயிலுக்கு இருவரும் செல்கிறார்கள். ஊர் ரொம்ப அழகாக இருக்கிறது என்று சந்தியா சந்தோஷத்தில் சுற்ற ஒரு பாட்டி மீது இடித்துவிட்டு மன்னிப்பு கேட்கிறாள். அந்த பாட்டியைப் பார்த்து சரவணன் நான் யார்னு தெரியலையா பாட்டி என்று கேட்கிறார். பாட்டி நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு நீ சிவகாமி பையன்தான என்று கேட்கிறார். அதோடு, அருகே இருக்கும் சந்தியாவை உன் பொண்டாட்டியா, நல்லா இருக்கா, உங்க அம்மா உன் மேல ரொம்ப பாசமா இருப்பா என்று அவர்களை வாழ்த்தி அனுப்புகிறாள்.
இதையடுத்து கோயிலுக்கு செல்லும் சரவணனும் சந்தியாவும் பூசாரியிடம் போய் பொங்கல் வைப்பதற்கான பானை எல்லாம் வாங்க் பொங்கல் வைக்கிறார்கள். விறகு அடுப்பில் பொங்கல் வைக்க சந்தியா சிரமப்படுகிறாள். சரவணன் உதவி செய்கிறான். பொங்கல் வைத்து முடித்ததும் இருவரும் சாமி கும்பிடுகிறார்கள்.
அப்போது சரவணன் சாமியிடம், “சந்தியா இல்லனா அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு வாழ்க்கை இல்லைனுதான் தோணுது. ஆனால், எனக்கு அவங்க சந்தோஷம்தான் முக்கியம். அவங்க என்ன ஆசைப்படறாங்களோ அதன்படிதான் நடக்கனும். எது வந்தாலும் நான் தாங்கிக்கிறேன்.” என்று வேண்டிக்கொள்கிறான்.
சந்தியா, “அம்மா தாயே! இவர் மனசுல என்ன கோபம் இருந்தாலும் அது சரியாகனும். நா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அது சரியாகி இவர்கூட வாழனும்னு நான் ஆசைப்படறேன். நீதான் எனக்கு துணையா இருக்கனும். நான் இவர் கூட சேர்ந்து வாழனும்னு விரும்புகிறேன். அதற்கு நீதான் உதவி பண்ணனும்.” என்று வேண்டிக்கொள்கிறாள்.
சாமி கும்பிட்ட பிறகு, பூசாரி, சரவணனிடம் உங்க அப்பா அம்மா வந்திருந்தால் மனசுக்கு நிறைவா இருந்திருக்கும் என்று கூறுகிறார். இதையடுத்து, சரவணன் அவரிடம் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு புறப்படுவதாகக்கூறுகிறான். பூசாரி, சந்தியா சரவணன் இருவரையும் பின்னால் இருக்கிற ராமர் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு போகச் சொல்கிறார். சரி என்று இருவரும் கோயிலில் இருந்து கிளம்புகிறார்கள்.
அடுத்த காட்சியில், வீட்டில் சர்ச்சனாவும் பார்வதியும் சமையலறையில் இருக்கிறார்கள். அப்போது, அர்ச்சனா, “என்ன பார்வதி, இப்பல்லாம் சந்தியா உன்னை ஸ்பெஷலா கவனிக்கிறாள். நான் உங்கிட்ட மாட்டிகிட்ட மாதிரி அவள் உங்கிட்ட மாட்டிகிட்டாளா?” என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி, “கவலையே படாதீங்க அண்ணி நீங்கதான் எப்போது, ஸ்பெஷல், உங்களை மாதிரி எல்லாம் பிளான் போட எல்லாம் யாராவது பொறந்து வந்தால்தான் உண்டு.” என்று கூறுகிறாள். இதைக்கேட்ட அர்ச்சனா, “பேச்சிலகூட சந்தியாவை விட்டுக்கொடுக்க மாட்ட போல இருக்கே. நீ பேசறதைப் பார்த்தால் நீதான் அவள்கிட்ட ஹெவியா ஏதாவது மாட்டியிருக்கியோ” என்று கேட்கிறாள். இதைக்கேட்ட பார்வதி கோபத்துடன் அண்ணி தேவையில்லாமல் பேசற வேளை வச்சுக்காதீங்க, இவள் திடீர்னு சந்தியா அண்ணி பக்கம் போயிட்டா நம்ம கதை கந்தலாகிடும்னு பயப்படுறீங்களா, அப்புறம் உங்களை மாட்டிவிடாமல் இருக்கிறதுக்கு நீங்க நடந்துக்கிற விதத்துலதான் இருக்குது. அதுக்கும் சந்தியா அண்ணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புரியுதா என்று எச்சரிக்கிறாள்.
அந்த நேரம் பார்த்து அர்ச்சனாவின் அம்மாவும் அவளுடைய தங்கையும் வீட்டுக்கு வருகிறார்கள். சிவகாமி அவர்களை நலம் விசாரிக்கிறார். அர்ச்சனாவின் தங்கை பிரியா பார்வதியை நலம் விசாரிக்கிறாள். அர்ச்சனாவும் தனது தாயையும் தங்கையையும் நலம் விசாரிக்கிறார்கள்.
சிவகாமி, பிரியாவின் கல்யாணம் பற்றி விசாரிக்கிறார். அதற்கு, மாப்பிள்ளை பேங்ல வேலை செய்கிறார் என்று கூறுகிறார். சிவகாமி, நாங்களும் பார்வதிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம் என்று கூறுகிறார். அர்ச்சனா, ஊர்ல இருந்து பாட்டி, மாப்பிள்ளை பார்த்து அனுப்பிச்சி இருக்காங்க, அவள் எப்படியும் கிராமத்துகு போயிடுவா, நீ பேங்க் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு டவுனுக்கு போகப் போற என்று கூறுகிறாள்.
இதைக்கேட்ட சிவகாமி ஏன், கிராமத்து மாப்பிள்ளைனா குறைச்சலா போச்சா, அதுவும் இன்னும் பேசி முழுசா முடியலயே என்று கேட்கிறார். அர்ச்சனாவை காபி போட்டு எடுத்துவர சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பார்வதி போன் அடிக்க அவள் போன் எடுத்து பேசுகிறாள். போனில், அர்ச்சனா தங்கையை பெண் பார்த்துவிட்டு பார்வதியைப் பிடித்திருக்கிறது என்று சொன்ன பாஸ்கர் பேசுகிறான்.
என்ன விஷயமா போன் பண்ணீங்க என்று கேட்கும் பார்வதியிடம் பாஸ்கர் போனில், “நீங்கதான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதான் என்னனு கேட்க கால் பண்ணேன். உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. உங்களை என்னால மறக்க முடியல பாரு. நான் ஒன்னும் சும்மா வாய் வார்த்தையா சொல்லல. மனசுல இருந்து நிஜமா சொல்றேங்க… நிங்களும் என்ன நம்பலாம். நான் ஒன்னும் கெட்டவன்லாம் இல்லை. லைஃப் ஃபுல்லா நான் உங்களை நல்லா பார்த்துபேங்க,” என்று கூறுகிறான். அதற்கு பார்வதி, அண்ணி என்னைப் பத்தி உங்ககிட்ட நிறைய சொன்னாங்க இல்லை என்று கேட்கிறாள். அதற்கு பாஸ்கர், ஆமாம் சொன்னாங்க அவங்க முயற்சி எல்லாம் வீணாப்போச்சு. அவங்க சொன்ன வார்த்தையை நான் நம்பவே இல்லைங்க, நான் உங்களை நம்பறேன். நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை பார்வதி, உங்க கடந்த காலம் எப்படி இருந்தாலும் கவலை இல்லை. பார்வதி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா, நீங்க இப்படி அமைதியா இருந்தால் மௌனம் சம்மதம்னு எடுத்துக்கவா, சரிங்க நீங்க சம்மதிக்கிறீங்கனு புரிஞ்சுக்கறேன். இந்த சம்மதத்துக்கு பரிசா நா உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கிறேன் ரெடியா இருங்க என்று கூறுகிறான்.
பாஸ்கர் போனை வைத்த பிறகு பார்வதி, நான் எவ்வளவோ அவமானப்படுத்தியும், நான் எவ்வளவு டிராமா பண்ணியும் என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறான். இவன் என் வாழ்க்கைல கிடைச்சால் வாழ்க்கை நிச்சயமா சந்தோஷமா இருக்கும்னு தோணுது என்று மனதுக்குள் நினைக்கிறாள்.
அடுத்த காட்சியில், சந்தியாவும் சரவணனும் கோயில் அருகே சென்று அமர்கிறார்கள், அப்போது, சந்தியா இதுதான் சரியான தருணம், வெளிப்படையா கேட்டுவிட வேண்டும் என்று “உங்கள் மனசுல இருக்கிறதை வெளிப்படையா சொல்லுங்க, இங்க நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கிறோம். என்னை திட்டுவதாக இருந்தாலும் திட்டுங்க, கொஞ்சநாளா உங்க மனசுல எதையோபோட்டு அரிக்குது இல்லை. அது என்னங்கறதை தயவு செய்து சொல்லுங்க, ஒவ்வொரு நாளும் நீங்க முகங்கொடுத்து பேசாமல், அப்படியே பேசினாலும் நீங்க முள்ளு குத்துற மாதிரி பேசுறது என்னால தாங்க முடியலைங்க, நான் என்ன நினைப்பேன். அதுவா இருக்குமா, இதுவா இருக்குமா, எதுவா இருக்கும்னு நானும் என்னென்னவோ யோசிச்சு பார்க்கிறேன். எனக்கு ஒன்னுமே புரியலைங்க, தயவு செய்து இப்பவாச்சும் சொல்லுங்க என்று கேட்கிறாள். அப்போது வானம் இடி இடிக்கிறது. ஆனால், சரவணன், எதுவும் இல்லைங்க என்று சொல்கிறான்.
அதற்கு சந்தியா, “கொஞ்ச நாளா ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிறீங்களே, அது ஏன், நான் மட்டும் இல்லை வீட்டில் இருக்கிற எல்லோரும் கேட்கிறாங்க, நீ ஏதாச்சும் செய்தியா, என் மகன் இப்படி நடந்துக்கிறவன் இல்லைனு அத்தை கேட்கிறாங்க. நான் என்னங்க சொல்லட்டும்.” என்று கேட்கிறாள். ஆனால், சரவணன், எதுவுமே பேசாமல் மனதுக்குள், “சொல்லுங்க உங்க மகனை விட்டு பிரிய நினைக்கிறேன். எனக்கு விவாகரத்து கொடுங்கனு கேளுங்க… வக்கீலைப் பார்த்து விவாகரத்து பத்திரம் வாங்கிட்டு வந்திருக்கீங்களே அது முடியும்போது இது முடியாதா என்ன என்று மனதுக்குள் நினைக்கிறான். தொடர்ந்து பேசும் சந்தியா, தயவு செய்து மனசு விட்டு சொல்லுங்க என்று கேட்க, சரவணன் சொல்லுங்க சொல்லுங்கனா இல்லாத ஒன்ன என்ன சொல்ல சொல்றீங்க என்று கேட்கிறான். அப்போது மழை பெய்கிறது. ஆனாலும் சந்தியா விடாமல் உங்க மனசுல என்ன இருக்கு என்று கேட்கிறாள். ஆனால், சரவணன், மழை அதிகமாகிட்ட போகுது கோயிலில் உட்கார்ந்துவிட்டு போகலாம் என்று கோயிலுக்கு செல்கிறார்கள்.
சந்தியாவும் சரவணனும் கோயில் முன் மண்டபத்துகுள் செல்கிறார்கள். அப்போது மழைத் தண்ணீரில் சந்தியா வழுக்கி விழ, சரவணன் அவளைத் தாங்கிப் பிடிக்கிறான். பிறகு, அவன் திடீரென அவளை விட்டு விளகுகிறான். சந்தியா, “ஏன் நான் உங்க தோள்ல கை போடக் கூடாதா, அந்த உரிமை எனக்கு இல்லையா, நான் உங்க பொண்டாட்டிங்க, யாரோ ஒரு பொண்ணு இல்லை. ஆமாங்க தப்புதான், இதுக்கு முன்னாடி நீங்க என் பக்கத்துல வரும்போது நான் கோபப்பட்டு கத்தியிருக்கிறேன். அது என்னோட தப்புதான். அதுக்காக காலம் பூரா இப்படியே இருந்துட முடியுமா, இல்லைனா நான் அன்னைக்கு அப்படி பண்ணனு இப்ப நீங்க பழி வாஞ்குறீங்களா, நமக்கு கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசம் ஆகுது. இதுவரைக்கும் நாம கணவன் மனைவியாவே வாழ ஆரம்பிக்கல, ஒரு ரூமுக்குள்ள இருந்தாலும் தனித்தனியாதான் படுத்து தூங்குறோம். இது மாறவே போறதில்லையா, ஊர்ல இருக்கிற மத்த கணவன் மனைவி மாதிரி நாம் ஒற்றுமையா, சந்தோஷமா வாழவே போறதில்லையாங்க, இதெல்லாம் வெறும் கனவு தானா, அப்ப நீங்க என்னை முழுமையா ஏற்றுகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம், கல்யாணமாகி வந்த புதுசுல வீட்ல நிறைய பிரச்னை இருந்துச்சு. இப்பவரைக்கும் அது ஓயல, ஆனால், எந்த வீட்லதான்ங்க பிரசனை இல்லை. அதை தாண்டிதாங்க எல்லோரும் வாழறாங்க, ஆனால், நமக்குள்ள இவ்ளோதூரம் இந்த பிரிவுனு சத்தியமா எனக்கு புரிலைங்க, நீங்களும் மனசை விட்டு பேசமாட்டேங்கறீங்க, நான் போய் யார்கிட்ட இதெல்லாம் கேட்பேன்” என்று கேட்கிறாள்.
அதற்கு சரவணன், ஏங்க நீங்க இப்ப இப்படி கேட்பீங்க, ஆனால், வீட்டுக்கு போனால், அங்க எங்க அம்மா இருப்பாங்க, அவங்களுக்கு உங்ககிட்ட ஆயிரம் எதிர்பார்ப்பு இருக்கும். ஒன்னு முடிஞ்சா இன்னொன்னு அது முடிஞ்சா இன்னொன்னு அதையெல்லா உங்களால நிறைவேத்த முடியுமா, என்று கேட்கிறேன். அதற்கு சந்தியா, கண்டிப்பா நான் பண்றேங்க, இதுதான் நான் வாழப்போற வீடு, நீங்க எல்லோரும்தான் என் சொந்தம்னு ஆகிடுச்சு. அவங்க ஆசையை நிறைவேத்தி அதுக்கு ஏத்தபடி என்னை மாத்திக்க நான் தயாரா இருக்கிறேன். என்ன ஒன்னு இந்த வீட்டு வேலை பொறுப்பு எல்லாம் எனக்கு கொஞ்சம் புதுசு. நினைச்ச உடனே எல்லாம் மாத்திக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்ங்க என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், நான் ஒன்னு சொல்றேங்க மத்தவங்களுக்காக உங்களை மாத்திக்க வேண்டாம். நீங்க இங்க யாருக்கும் அடிமை இல்லை. மாத்திக்க வேண்டிய அவசியமும் இல்லை. இல்லை நீங்க வாழ விரும்புற வாழ்க்கையை வாழ்ந்துட்டு போங்க, இங்க பாருங்க ஒரு தப்பான பஸ்ல ஏறிட்டோம்னு தெரிஞ்சும், எவ்வளவு தூரம் போக முடியும், அப்படியே நாம தூரமா போயிருந்தாலும், அது நாம போக வேண்டிய இடம் இல்லைனா திரும்ப வந்துதான ஆகனும், இதோ பாருங்க நீங்க என்னை விட்டு பிரிஞ்சு போறதா இருந்தா தாராளமா போங்க, அதுதான் உங்களுக்கு சந்தோஷம்னா, அதைதான் நீங்க ஆசைப் படறீங்கனா, நீங்க தாராளமா போங்க, நான் உங்க ஆசைக்கு குறுக்க நிக்க மாட்டேங்க என்று கூறுகிறான்.
இதைக்கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடையும் சந்தியா கண்ணீருடன், நீங்க ஏன் இப்படி பேசறீங்கனு தெரியல, இப்பகூட உங்க மனசுல என்ன இருக்குனு எனக்கு சுத்தமா புரியல என்று கேட்கிறாள். ஆனால், சரவணன் எதுவும் சொல்லாமல் அங்கே இருந்து மழையில் நனைத்துகொண்டே வெளியே செல்கிறான். அவன் பின்னால் சந்தியாவும் போய்க்கொண்டிருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.