ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியல், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இந்த சீரியலில் சீனு கேரக்டரில் நடித்து வந்த நடிகர் திடீரென விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய சீனு களமிறங்க உள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ், தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சந்தியா, ராஜீவ் பரமேஸ்வர், அந்தாரா, லஸ்யா, சுர்ஜித், குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல், இந்தியில் வெளியான செப்னே சுஹனே லடக்பன் ஹே என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அக்கா தங்கைகளின் பாசத்தை பேசும் கதையாக இருந்தாலும், இந்த சீரியலில் பெண்கள் சாதனை, வரதட்சனை உள்ளிட்ட சமூக சீர்த்திருத்தங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் ஒரு நாயகனாக சீனு என்ற கதாபாத்திரத்தில் சுர்ஜித் நடித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதே சமயம், சீனு கேரக்டர் இதுவரை வெளியூர் சென்றிருப்பதாக சொல்லி கதை நகர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனு கதாபாத்திரத்தில் நடிக்க புதிய நடிகர் கமிட் செய்யப்பட்டுள்ளார். வரும் நாட்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் மனோஜ் பிரபு என்பவர் நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்பாக யூடியூப் தொடர்களில் நடித்துள்ளார். விரைவில் சீனுவாக இவரது காட்சிகள் சந்தியா ராகம் சீரியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.