விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், பார்வதி கேரக்டரில் நடித்துவரும் நடிகை பாக்கியலட்சுமி, தற்போதைய முதல்வது ஸ்டாலினுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியலில், இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அவரது மனைவி விஜயா கேரக்டரில், அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். குடுபத்தில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் விஜயா கேரக்டரின் நெருங்கிய தோழி பார்வதி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பாக்கியலட்சுமி. 1982-ம் ஆண்டு வெளியான தேவியின் திருவிளையாடல் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள இவர், தற்போது சிறகடிக்க ஆசை மட்டுமல்லாமல், சன்டிவியின் லட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி அளித்த பாக்கியலட்சுமி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதில், நான் பல படங்களில் நடித்திருந்தாலும், ஒருசில திரைப்படங்களில் நடித்த அனுபவத்தை என்னால் மற்ற முடியாது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் நடித்த திரைப்படத்தில் நான் அவருடன் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும், சீதா ப்ரண்டாகவும் நடித்திருந்தேன்.
அதேபோல் தாயா தாரமா படத்தில் ஆனந்த்பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தேன். இந்த படத்தில் அவருடன் நான் நடனமும் ஆடி இருக்கிறேன். ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரு படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாகவும் நடித்திருக்கிறேன். இருவருமே எனக்கு பிடித்தவர்கள். அதில் ரஜினிகாந்த் மிகவும் பெஸ்ட். எனக்கு அவருடன் நடித்தது மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான். எனது மகன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்று பாக்கியலட்சுமி கூறியுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது படத்தில், அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தாலும், தாதா கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் காதலிக்கும் பெண்ணாக பாக்கியலட்சுமி நடித்திருப்பார். அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான ஒரே ரத்தம் என்ற படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நந்தகுமார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த பாக்கியலட்சுமி கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“