கர்ப்பமாக இருக்கும் மனைவியை வைத்துக்கொண்டு கணவன் இப்படி செய்யலாமா அதேபோல் மருமகள் இருக்கும்போதே தனது மகன் வாழ்க்கையில் வந்த தேவதை என்று மற்றொரு பெண்ணை காட்டுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று கேட்க வைக்கிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், இளைஞர்கள் பெண்கள் என பலதரப்பினரையும் கவர்ந்து வருகிறது. சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சீரியல் குழுவினர் நாளுக்கு நாள் அரைத்த மாவையே தான் அரைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
சொல்லி வைத்தபோல் பெரும்பாலான சீரியல்களில் கல்யாணம் ஆன நாயகனை வில்லியாக வருபவர்கள் காதலிக்கிறார்கள். அதேபோல் நாயன் பக்கத்தில் இருந்தே ஒருவர் குழி பறிப்பார் ஆனால் இதை பற்றி ஒன்றுமே தெரியாத அவர் யார் இந்த வேலைகளை எல்லாம் செய்வது என்று வெளியில் தேடிக்கொண்டிருப்பார். சில சமயம் நமக்கு பக்கத்தில் இருந்துகொண்டே இவர் தான் இந்த நமக்கு துரோகம் செய்கிறார் என்று நாயகனுக்கு தெரிந்தாலும் அதை வீட்டாரிடம் சொல்ல மாட.டார்.
ஏன்னா அப்போ தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் அதிகமாகுமாம். அப்படி ஒரு நிலை தான் தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு வந்திருக்கிறது. தொடக்கத்தில் ஒரு டீசண்டான சீரியலாக பரபரப்பின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் அர்ஜூன் எப்போது கோதையை வீட்டை விட்டு துரத்தினாரோ அப்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலில் வீழ்ச்சியை சந்தித்தது.
வீட்டை விட்டு வெளியேறிய கோதை குடும்பம் தமிழிடம் தான் தஞ்சமடைவார்கள் என்று ரசிகர்களுக்கு தெரியும். அது போகட்டம் என்றாலும் அடுத்து தமிழ் – அர்ஜூன் இவர்களுக்கு இடையில் நடந்த போட்டி ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கதையில் விறுவிறுப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேக்னா என்ற கேரக்டரை உள்ளே கொண்டு வந்தார்கள். ஆனால் அதுவே இப்போது சீரியலுக்கு கடும் விமர்சனங்களை கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் திமிராக இருந்த மேக்னா தீவிபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய தமிழுக்கு உதவ முடிவு செய்தாலும், கல்யாணம் ஆகாமல் இருந்தால் தான் உதவி செய்வேன் என்ற முடிவுடன் இருக்கிறார். இதை தெரிந்துகொண்ட தமிழ் நண்பன் நமச்சி தமிழுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று பொய் சொல்ல, மேக்னா இப்போது தமிழை காதலிக்க தொடங்கியுள்ளார். இதன் மூலம் மற்ற சீரியல்கள் போலவே இந்த சீரியலிலும் திருமணமான நாயகனை மற்றொரு நடிகை காதலிக்கிறார். தமிழுக்கு திருமணமான தகவலை மறைக்க நமச்சி தினமும் போராடுகிறார்.
அதே சமயம் அடிக்கடி தமிழ் வீட்டுக்கு வரும் மேக்னா சரஸ்வதியை பார்த்து கோபப்படுவதோடு மட்டுமல்லாமல், தமிழுடன் திருமணமானவுடன் சர்ஸ்வதியை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று நினைக்கிறார். நாம் வரும்போதேல்லாம் இவர் இங்கே இருக்கிறாரே இவர் யார் என்ற சந்தேகம் மேக்னாவுக்கு வரவே இல்லை என்பது தான் வேடிக்கை. அதேபோல் தமிழுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அர்ஜூன் பலமுறை சொல்லியும் மேக்னா அதில் உண்மை இருக்கிறதா என்பதை யோசிக்க கூட இல்லை.
தனி ஆளாக பல தொழில்கள் செய்து வரும் மேக்னா இப்படி ஒரு விஷயத்தை ஆராயாமல் அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கேட்காமலா இருப்பார்? அதேபோல் தமிழ் பிறந்த நாளை மேக்னா பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார். அப்போது கேக் வெட்டும் தமிழ் அதை தனது மனைவிக்கு ஊட்டாமல் மேக்னாவுக்கு ஊட்டுகிறார். அப்பா அம்மாவுக்கு பிறகு மேக்னா தான் எல்லாமே என்று தமிழ் நினைக்கிறாரா? அதேபோல் இதை பார்த்த கோதை, தமிழ் வாழ்க்கையில் வந்த தேவதை மேக்னா என்று சொல்கிறார்.
அப்போ சரஸ்வதி தமிழுக்கு யார் என்ற கேள்வியை கோதையிடம் கேட்க வேண்டும். அதேபோல் தமிழ் வீட்டில் எப்போதும் சரஸ்வதி இருக்கிறார் தமிழின் கம்பெனியும் சரஸ்வதி என்ற பெயரில் தான் இருக்கிறது. இதை வைத்து மேக்னாவுக்கு எந்த சந்தேகமும் வரவில்லையா என பல அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தாலும், இந்த உண்மை தெரியவரும்போது சீரியலுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும் என்று சீரியல் குழுவினர் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.