Tamil Serial Chithi 2 Meena Vs Ramya Krishnan : சன்டிவியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி பெரிய வெற்றி பெற்ற சீரியல் சித்தி. ராதிகா சரத்குமார், சிவக்குமார் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த சீரியல் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தது. தற்போது 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் இந்த சீரியலின் 2-ம் பாகமாக சித்தி 2 ஒளிபரப்பாக தொடங்கியது. ராதிகா சரத்குமார் பொன்வண்ணன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியல் தொடங்கியது முதல் பெரும் சோதனையை சந்தித்து வருகிறது.
இந்த சீரியல் ஒளிபரப்பாகி 2 மாதங்கள் கடந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பு உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்திற்கு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பிறகு தொடங்கிய சித்தி 2 சீரியலில் பொன்வண்ணன் உட்பட பல கதாப்பாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் சித்தி 2 சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் முதன்மை கதாப்பாத்திரம் சாரதாவாக நடித்து வந்த ராதிகா சரத்குமார் தான்.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பை வெளியிட்ட ராதிகா சரத்குமார் சித்தி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பு சித்தி சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில, அவர் கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதால் ராதிகா சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. இதனால் சித்தி 2 அடையாளமாக இருந்த ராதிகா இல்லாததால், அவரது கதாப்பாத்திரத்தில் வேறு ஒருவரை மாற்றலாமா? அல்லது சீரியலை நிறுத்திவிடலாமா என்பது குறித்து படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது திடீர் திருப்பமாக சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக சாரதா கதாப்பாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா ஆகியோரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இன்னமும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் சம்பளம் கொடுத்தாவது இருவரில் ஒருவரை நடிக்க சம்மதிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் நடிகை மீனா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான த்ரிஷ்யம் 2 படம் பெரும் வரவேற்பை பெற்று வருவதால், இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான த்ரிஷ்யம் முதல் பாகத்தில் மீனா நாயகியாக நடித்திருந்த நிலையில், தற்போது தெலுங்கில் 2-ம் பாகம் தயாராக உள்ளதால் மீனா அந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் த்ரிஷ்யம் படத்தின் வெற்றியால் அவருக்கு மேலும் படவாய்ப்புகள் குவிய வாய்ப்புள்ளதால் சித்தி 2 சீரியலில் அவர் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என்பது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்னவே கடந்த 2006-ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி, 2009-ம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணம், ஆகிய சீரியல்களில் மீனா நடித்திருந்தார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள ரம்யா கிருஷ்ணன், பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், ஏற்கனவே சன்டியில், ஒளிபரப்பாகிய வம்சம், தங்கம். கலசம், ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழில் உயர்ந்த மனிதன், தெலுங்கில் ரிபப்ளிக், லிக்கர், கன்னடத்தில் சிவகாமி, ஆகிய படங்களிலும், ஜி தெலுங்கில் நாகபைரவி என்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனால் சித்தி 2 சீரியலில், ராதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க ரம்யாகிருஷ்ணனுக்கே அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில், நடிகை மீனா சீரியல்களில் நடித்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், அவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் பிஸியாக நடித்து வந்தாலும், தெலுங்கில் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பூஜை படத்தில் விஷாலுக்கு அம்மாவாக நடித்திருந்த ராதிகா கேரக்டரில், கன்னட ரீமேக்கில், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இதனால் இந்த சீரியலில் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.