முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் கடந்த வாரம் ஒரே நாளில் புதிதாக 3 சீரியல்கள் ஒளிபரப்பு தொடங்கியது. இந்த 3 சீரியல்களுமே தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமுதாவும் அன்னலட்சுமியும்
ஜீதமிழில் கடந்த ஜூலை 4ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். ஓரிரு எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ள நிலையில் சீரியல் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அம்மாவை இழந்ததும் குடும்பத்துக்காக தனது ஆசைகளை தியாகம் செய்து விட்டு வாழும் அமுதாவை அன்னலட்சுமி மகன் செந்திலுக்காக பெண் பார்க்க வருகின்றனர். இதே அமுதாவை செந்திலின் பெரியப்பா மகனுக்கும் பெண் கேட்டு வர செந்தில் வாத்தியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை தான் பிடித்திருப்பதாக அமுதா சொல்லி விடுகிறாள். இதனால் குடும்பத்துக்குள் ஏற்கனவே இருந்த பகை இன்னும் அதிகமாகிறது.
இப்படியான சூழலில் அமுதா, செந்தில் கல்யாணம் எப்படி நடக்க போகிறது? செந்தில் வாத்தியார் இல்லை என தெரிந்தால் இவர்கள் திருமண வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விகள் சீரியல் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.
மாரி
ஜீதமிழில் கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள சீரியல் மாரி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என சொல்லலாம். ஆஷிகா மாரியாக நடிக்க அபிதா இந்த மாரியின் அம்மாவாக தெய்வானை என்ற கேரக்டரில் நடிக்கிறார். மேலும் டெல்லி கணேஷ் மாரியின் தாத்தாவாக நடிக்க வனிதா விஜயகுமார், பாண்டிராஜன், சோனா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் இதுவரை ஒளிபரப்பான எபிசோடுகளில் ஊரில் நடக்க உள்ள திருவிழாவில் அசம்பாவிதம் நடக்க போவதாக மாரிக்கு தெரிய வர இதை தடுத்து நிறுத்த அவர் முயற்சி செய்வதும் பல பேர் இணைந்து தேரை இழுத்தாலும் தேர் நகராமல் இருக்க மாரி வேண்டி கொண்டு தேர் வடத்தின் மீது கையை வைத்ததும் தேர் நகர்கிறது.
இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சின்னத்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆன்மீகம் கலந்த சீரியலை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்க இருப்பதாக வனிதாவிடம் சொல்ல அவர் வாய் வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியா என மாரியை திட்டி அறையும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை காப்பாற்ற மாரி போராட ஆனால் ஊர் மக்கள் அவரை தவறாக புரிந்து கொள்ள அதையெல்லாம் எப்படி இவர் உடைத்தெறிய போகிறார் என்ற எதிர்பார்ப்பு சீரியல் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருதலால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.
மீனாட்சி பொண்ணுங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியல் மூலமாக முதல் முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கிறார் எதார்த்த நாயகி அர்ச்சனா. மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இவருடைய மூன்று மகள்களாக காயத்ரி யுவராஜ், மோக்ஷிதா, பிரணிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மோக்ஷிதா கதையின் நாயகியாக நடிக்க பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன் நாயகனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த சீரியலின் முதல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட கடை திறப்பதற்கு முன்னதாக கூட்டம் கூடி நிற்கிறது. அந்த அளவிற்கு தரமான உணவை கொடுத்து வருகின்றனர்.
இந்த மெஸ்ஸை நடத்தி அதன் மூலம் தன்னுடைய மூன்று மகள்களின் ஆசைப்படி படிக்க வைக்கிறார் மீனாட்சி. ஒத்த பொம்பளையா என் பொண்ணுங்க ஆசைப்பட்டதை எல்லா நிறைவேத்திட்டு இருக்கேன். ஆனால் ஒரு அம்மாவா நான் ஆசைப்படுற வாழ்க்கையை எப்படி தர போறேன் என அர்ச்சனா பேசும் வசனங்கள் பல குடும்பங்களில் பெண்கள் குடும்பத்துக்காக படும் கஷ்டங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“